Header Ads

  • BREAKING



    மதுரை, சென்னையில் 4 பயங்கரவாதிகள் கைது.

    மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை திங்கள்கிழமை சந்தித்த கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளின் பெற்றோர்.

    ஆறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய மென்பொருள் பொறியாளர் உள்பட 4 பயங்கரவாதிகளை தேசிய புலனாய்வு மைய (என்ஐஏ) அதிகாரிகளும், தமிழக போலீஸாரும் இணைந்து மதுரையிலும், சென்னையிலும் கைது செய்துள்ளனர்.
    இந்தக் கும்பல் அல்காய்தா அடிப்படை இயக்கம் எனும் பெயரில் புதிய இயக்கத்தைத் தொடங்கி, நாசவேலைகளில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
    இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
    ஆந்திர மாநிலம் சித்தூர் நீதிமன்ற வளாகத்தில் கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி வாகன நிறுத்துமிடத்தில் சக்தி குறைவான ஒரு குண்டு வெடித்தது.

    இந்தச் சம்பவத்தில் நீதிமன்ற ஊழியர்கள் உள்பட 3 பேர் காயமடைந்தனர். 
    இந்தச் சம்பவத்துக்கு பின்னர், கேரள மாநிலம் கொல்லம் நீதிமன்ற வளாகம், கர்நாடக மாநிலம் மைசூரு நீதிமன்ற வளாகம், கேரள மாநிலம் மலப்புரம் நீதிமன்ற வளாகம் என 6 நீதிமன்ற வளாகங்களில் அதேபோன்ற குண்டுகள் அடுத்தடுத்த மாதங்களில் வெடித்தன.
    6 குண்டுவெடிப்பிலும் ஒரே நபர்கள்: இந்தத் தொடர் குண்டுவெடிப்பு குறித்து தேசிய புலனாய்வு மைய (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அவர்களது விசாரணையில் 6 குண்டுவெடிப்பிலும் ஒரே நபர்கள் ஈடுபட்டிருப்பதும், அவர்கள் குண்டுவெடிப்புக்கு பிரஷர் குக்கர், டிபன் பாக்ஸ் ஆகியவற்றையும், பட்டாசு வெடிக்கப் பயன்படுத்தும் வெடிபொருள்களையும் பயன்படுத்துவது தெரியவந்தது. இதில், 3 இடங்களில் பிரஷ் குக்கர் வெடிகுண்டும், 3 இடங்களில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டும் பயன்படுத்தப்பட்டிருந்தது.
    இந்த வகை வெடிகுண்டுகள், தமிழகத்தில் பயன்படுத்தப்படுவது என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்குத் தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள், தமிழக காவல்துறையின் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாருடன் இணைந்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இந்த விசாரணையில், மதுரையை மையமாகக் கொண்டு புதிதாக அல்காய்தா அடிப்படை இயக்கம் என்ற பெயரில் புதிதாக ஒரு பயங்கரவாத இயக்கம் தொடங்கியிருப்பதும், அந்த இயக்கத்தினரே நீதிமன்றங்களை மையமாக கொண்டு குண்டுவெடிப்புச் சம்பவங்களை நிகழ்த்தி வருவதும் தெரியந்தது.
    மேலும், இந்த இயக்கத்துக்கு தலைவராக சம்சுல் என்ற கருவா சம்சுல் இருப்பதும், அவர் மீது ஏற்கெனவே பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானியைக் கொலை செய்யத் திட்டமிட்டு வைக்கப்பட்ட பைப் குண்டு வழக்கு இருப்பதும் தெரியவந்தது.
    இதையடுத்து, மதுரையில் முகாமிட்டிருந்த என்ஐஏ அதிகாரிகள், ஆறு குண்டு வெடிப்பு சம்பவங்களிலும் தொடர்புடையதாக மதுரை அய்யர் பங்களா ஜி.ஆர்.நகரைச் சேர்ந்த மு.முகம்மது அயூப் (23), புதூர் மண்மலைமேடு ஜை.கரீம்ராஜா (26), இஸ்மாயில்புரத்தைச் சேர்ந்த நை.அப்பாஸ் அலி (24) ஆகிய 3 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
    அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த தாவூத் சுலைமான் (23) என்பவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். பொறியியல் படித்திருக்கும் இவருக்கும், சொந்த ஊர் மதுரையாகும். அவர் திருவான்மியூரில் தங்கியிருந்து, சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்து வந்தார். முக்கிய எதிரியான சம்சுல் தலைமறைவாகி இருப்பதால், என்ஐஏ அதிகாரிகளும், தமிழக போலீஸாரும் அவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
    கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன.
    மதுரையில் செய்யப்பட்ட வெடிகுண்டு: ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய 3 மாநிலங்களில் 6 குண்டுவெடிப்புச் சம்பவங்களை இந்த இயக்கத்தினர் நடத்தினாலும், குண்டுகள் மதுரையில் இருந்து செய்து அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் குண்டுகளை சம்சுலே செய்து, எஞ்சிய 4 பேரிடம் கொடுத்து நீதிமன்ற வளாங்களில் வைக்கச் செய்துள்ளார்.
    அதேபோல எச்சரிக்கை கடிதம் எழுதுவது, ஒசாமா பின்லேடன் படம் பிரிண்ட் எடுப்பது, அடுத்தத் தாக்குதல் குறித்து திட்டமிடுவது போன்ற பணிகளை தாவூத் சுலைமான் திட்டமிட்டுள்ளார். இவர்கள் அனைவரும் மதுரையிலேயே மாதத்துக்கு ஒரு முறை ரகசியமாக கூட்டங்களை நடத்தி சதித் திட்டங்களை நிறைவேற்றியிருக்கின்றனர். நீதிமன்றங்களில் 6 குண்டுவெடிப்புச் சம்பவங்களை இந்த இயக்கத்தினர் நடத்தியுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட 22 அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு இயக்கத் தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டிருக்கின்றனர்.
    வாக்குமூலம்: பாபர் மசூதி வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் நீதிமன்றங்கள் தங்களுக்கு எதிராகவே செயல்படுவதால், நீதிமன்ற வளாகங்களில் குண்டு வைத்ததாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்திருக்கின்றனர். இதன் அடுத்தகட்டமாக முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படும் தலைவர்களைக் கொலை செய்ய திட்டமிட்டதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
    இந்த வழக்கில் இந்த இயக்கத்தைச் சேர்ந்த வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது, யாரெல்லாம் குண்டு வைப்பதற்கு உதவி புரிந்தார்கள் என்ற கோணத்தில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து, தடை செய்யப்பட்ட சில வெடிப் பொருள்கள், தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்ட கணினி, செல்லிடப்பேசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

    ஒரு வெடிகுண்டு தயாரிக்க ரூ. 1,300 மட்டுமே செலவு! 
    ஒரு வெடிகுண்டு செய்வதற்கு ரூ.1,300 மட்டுமே பயங்கரவாதிகள் செலவு செய்திருப்பது என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
    இதுகுறித்த விவரம்:-
    ஆறு இடங்களிலும் வைக்கப்பட்ட வெடிகுண்டுகளுக்கு அனைத்து மூலப்பொருள்களையும் மதுரையிலேயே பயங்கரவாதிகள் வாங்கியுள்ளனர். இதில், குண்டுகளைத் தயாரித்து ஏற்கெனவே பழக்கப்பட்ட சம்சுல் மட்டுமே 6 வெடிகுண்டுகளையும் தயாரித்துள்ளார்.
    இதற்காக பெரிய ரக பட்டாசுகளில் இருக்கும் மருந்துகளைப் பிரித்தெடுத்து, அதை டிபன் பாக்ஸ்களிலும், பிரஷர் குக்கரிலும் வைத்து வெடிகுண்டுகளை தயார் செய்துள்ளார்.
    நீதிமன்றங்களில் தங்களது எதிர்ப்பை காட்ட மட்டுமே குண்டுகளை வெடிக்க வைக்க திட்டமிட்டதால், குறைந்த சக்தி கொண்ட வெடிபொருள்கள் மூலம் மட்டுமே கொண்டு குண்டை தயார் செய்ததாக பிடிபட்ட பயங்கரவாதிகள் என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். ஒரு வெடிகுண்டை தயாரிக்க மொத்தம் ரூ.1,300 மட்டுமே செலவு செய்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

    குண்டுவெடிப்பில் இருந்து... கைது வரை... 
    2015 ஜனவரி 25
    தினமலர்
    அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.
    அக்டோபர் 10
    தமிழகத்தில் உள்ள 7 மத்திய சிறைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.
    2016 ஏப்ரல் 7
    ஆந்திர மாநிலம் சித்தூர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 3 பேர் காயம்.
    ஜூன் 16
    கேரள மாநிலம் கொல்லம் நீதிமன்ற வளாகத்தில் குண்டு வெடித்ததில் இளைஞர் காயம்.
    ஆகஸ்ட் 1
    கர்நாடக மாநிலம் மைசூரு நீதிமன்ற வளாகத்தில் குண்டு வெடித்ததில் இருவர் காயம்.
    நவம்பர் 1
    கேரள மாநிலம் மலப்புரத்தில் நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு.
    நவம்பர் 28
    மதுரை, சென்னையில் அல்கொய்தா அடிப்படை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கைது.

    மதுரையில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்ட முகமது அயூப்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad