Header Ads

  • BREAKING



    ரூ.50, ரூ.100 பதுக்கலை தடுக்க ரிசர்வ் வங்கி சலுகை அறிவிப்பு.

    மும்பை: பழைய ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பை தொடர்ந்து, இந்த நோட்டு வைத்திருப்பவர்கள் வங்கிகளில் டெபாசிட் செய்து வருகின்றனர். நடப்பு கணக்கு, சேமிப்பு கணக்கு ஆகியவற்றுக்கு ஏற்ப, கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கு வாராந்திர உச்சவரம்பை முறையே ரூ.50,000, ரூ.24,000ஆக ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது. 

    ஆனால் டெபாசிட் செய்தவர்கள் மட்டுமின்றி, ஏற்கெனவே கணக்கில் இருக்கும் பணத்தை கூட எடுக்க முடியாமல் பொதுமக்களும், வர்த்தகர்களும் திணறுகின்றனர். 20 நாட்களுக்கு மேலாகியும் நிலைமை சீரடையவில்லை. வங்கியில் கால்கடுக்க காத்திருந்தும் பலனில்லை. கடந்த 27ம் தேதி நிலவரப்படி, செல்லாத நோட்டாக ரூ.8,44,981 கோடி வங்கிகளுக்கு வந்துள்ளன. இதில் டெபாசிட் செய்யப்பட்டது ரூ.8,11,033 கோடி, பழைய நோட்டு மாற்றிய வகையில் ரூ.33,948 கோடி வந்துள்ளது. இதற்கு மாற்றாக வங்கிகளில் இருந்து ரூ.2.16 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. 

    பணம் பற்றாக்குறையால், ரேஷன் முறைபோல் நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு இவ்வளவுதான் தரமுடியும் என்று கூறவேண்டிய நிலையில் வங்கிகள் உள்ளன. இதனால் வர்த்தகர்கள் வசூல் பணத்தை வங்கியில் செலுத்த தயங்குகின்றனர். பொதுமக்களும் புதிய நோட்டாக டெபாசிட் செய்ய தயங்குகின்றனர். இந்நிலையை போக்க ரிசர்வ் வங்கி நேற்று முன்தினம் புது அறிவிப்பு வெளியிட்டது. 

    இதில், புதிய நோட்டாக அல்லது செல்லுபடியாகும் காசு மற்றும் ரூபாய் நோட்டாக டெபாசிட் செய்பவர்களுக்கு உச்சவரம்பு உயர்த்தப்படும். அதாவது, தனிநபர் தனது கணக்கில் செல்லுபடியாகும் ரூபாயாக (ரூ.10, ரூ.50, ரூ.100, புதிய ரூ.500, ரூ.2,000) டெபாசிட் செய்பவர்கள், அதே அளவுக்கு உச்சவரம்பை விட கூடுதலாக எடுத்துக்கொள்ளலாம். அவ்வாறு எடுக்கும்போது அவை புதிய ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டாக மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதன்மூலம் வங்கிகளில் ரூ.100, ரூ.50 நோட்டு டெபாசிட் அதிகரிக்கும் எனவும், சில்லரை தட்டுப்பாடு நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad