Header Ads

  • BREAKING



    ரூ.600 கோடியை செலுத்தாவிட்டால் மீண்டும் சிறை: சுப்ரதா ராய்க்கு உச்ச நீதிமன்றம் கெடு.

    சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் பிணையில் வெளியே இருக்க வேண்டுமெனில், அவர் மேலும் ரூ.600 கோடியை, அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
    அந்தத் தொகையை செலுத்தத் தவறினால், அவர் மீண்டும் சிறை செல்ல நேரிடும் என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சுப்ரதா ராய் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் கூறியதாவது:
    சஹாரா குழுமத்துக்கு ரூ.1.87 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன.

    ஆனால், அவற்றை விற்பனை செய்ய முடியவில்லை. நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளின்படி, அவ்வப்போது இந்திய பங்கு-பரிவர்த்தனை வாரியத்துக்கு (செபி) சுப்ரதா ராய் தரப்பில் பணம் செலுத்தப்பட்டு வருகிறது. சுப்ரதா ராய் தனது தாயாரின் மறைவுக்குப் பின் ஜாமீனில் வெளிவந்த பிறகு ரூ.1,200 கோடியைச் செலுத்தியுள்ளார். இதுவரை செபியிடம் மொத்தம் ரூ.11,000 கோடி செலுத்தப்பட்டுள்ளது. இன்னும், 14,000 கோடி ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது என்றார் அவர். 
    அதைத் தொடர்ந்து, சுப்ரதா ராய் ஜாமீனில் வெளியில் இருக்க வேண்டுமெனில், ரூ.1,000 கோடியை செபியிடம் 2 மாதங்களில் செலுத்த வேண்டும் அல்லது அவருடைய சொத்துகளை நிர்வகிக்க அலுவலரை நியமிக்க நேரிடும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இருப்பினும் இத்தொகையைக் குறைத்து ரூ.600 கோடியை அடுத்த ஆண்டு பிப்ரவரி 6-ஆம் தேதிக்குள் அவர் செலுத்த வேண்டும் என்று அவர்கள் பின்னர் உத்தரவிட்டனர்.
    "சஹாரா' குழும நிறுவனங்களில் முதலீடு செய்த ரூ.24,000 கோடியை முதலீட்டாளர்களுக்குத் திருப்பிக் கொடுக்காததால் கடந்த 2014-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட அதன் தலைவர் சுப்ரதா ராய், திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அந்தத் தொகையை முதலீட்டாளர்களுக்குத் திருப்பித் தருவதற்காக, செபியிடம் ரூ.24,000 கோடியை வட்டியுடன் அவர் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad