மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் 7 எம்.பி.க்கள் குழு இன்று கியூபா பயணம்: ஃபிடல் காஸ்ட்ரோ இறுதிச் சடங்கில் பங்கேற்பு.
கியூபா நாட்டின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஏழு எம்.பி.க்கள் அடங்கிய குழு செவ்வாய்க்கிமை (நவம்பர் 29) அந்நாட்டுக்கு செல்கிறது.
எம்.பி.க்கள் குழுவில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த மக்களவை பாஜக உறுப்பினர் ராமென் தேக்கா, முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினருமான ஆனந்த் சர்மா, தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை துணைத் தலைவரும், மக்களவை அதிமுக உறுப்பினருமான மு.தம்பிதுரை, மாநிலங்களவை இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராஜா, மாநிலங்களவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் சீதாராம் யெச்சூரி, ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த மக்களவை பிஜு ஜனதா தள உறுப்பினர் ஜினா ஹிகாகா, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மாநிலங்களவை சமாஜவாதி கட்சி உறுப்பினர் ஜாவேத் அலி கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இக்குழுவினர் செவ்வாய்க்கிழமை காலையில் தில்லியில் இருந்து கியூபா தலைநகர் ஹவானாவுக்கு தனி விமானத்தில் செல்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை பிரதமர் அலுவலகம், மத்திய உள்துறை, வெளியுறவுத் துறை ஆகியவை இணைந்து மேற்கொண்டுள்ளன.
காஸ்ட்ரோ மறைவையொட்டி, கியூபா முழுவதும் ஒன்பது நாள்களுக்கு அந்நாட்டு அரசு துக்கம் அனுசரித்துள்ளது. அவரது உடல் கடந்த சனிக்கிழமை (நவம்பர் 26) தகனம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவரது அஸ்தியின் ஒரு பகுதி, பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கியூபா முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. சாண்டியாகோ நகரில் டிசம்பர் 4-ஆம் தேதி காஸ்ட்ரோவின் கல்லறைக்கு அஸ்தி கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.
இதையொட்டி, இந்தியாவில் இருந்து செவ்வாய்க்கிழமை புறப்படும் ராஜ்நாத் சிங் தலைமையிலான எம்.பி.க்கள் குழு, காஸ்ட்ரோவின் அஸ்திக்கு அஞ்சலி செலுத்திய பிறகு வியாழக்கிழமை (டிசம்பர் 1) தில்லிக்கு திரும்பும் என்று பிரதமர் அலுவலக உயரதிகாரி தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை