உடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.
அமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக திருமூர்த்தி அணைப் பகுதியில் உள்ள பஞ்சலிங்க அருவி, அமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
உடுமலையை அடுத்து அமைந்துள்ள அமராவதி அணையின் மொத்த உயரம் 90 அடி. திருப்பூர், ஈரோடு, கரூர் என மூன்று மாவட்டங்களில் உள்ள சுமார் 55 ஆயிரம் ஏக்கர் பழைய, புதிய ஆயக்கட்டு பாசன நிலங்கள் இந்த அணையை நம்பியே உள்ளன.
இந்நிலையில், உடுமலை வனப் பகுதிகளான பாம்பாறு, சின்னாறு, தேனாறு உள்ளிட்ட அமராவதி அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை பகலில் அணைக்கு 65 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை காலை அது 383 கனஅடியாக உயர்ந்தது. அணையில் இருந்து 2 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அமராவதி அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு: உடுமலையை அடுத்த திருமூர்த்திமலையில் பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயில் அருகே உள்ள பஞ்சலிங்கம் அருவியில் பலத்த மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மேலும், இந்த வெள்ளம் அமணலிங்கேஸ்வரர் கோயிலைச் சூழ்ந்தது. இதனால், கோயிலில் காலை நேர பூஜைகள் ரத்து செய்யப்பட்டன. பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் அங்கு குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை