Header Ads

  • BREAKING



    பென் டிரைவ்'-இல் மிரட்டல்; விடியோ வெளியிட்ட பயங்கரவாதிகள்.

    பாலவாக்கத்தில் சுலைமான் தங்கியிருந்த வாடகை வீடு.

    கைது செய்யப்பட்ட 5 பயங்கரவாதிகளும் லட்சியம் என்ற பெயரில் அடுத்து தாக்கப் போகும் இடம் குறித்த விடியோ காட்சி தொகுப்பை "பென் டிரைவ்' மூலம் அறிவித்திருப்பது தெரியவந்துள்ளது.
    இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
    தென் மாநிலங்களில் 6 நீதிமன்றங்களில் குண்டு வைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட அல்காய்தா அடிப்படை இயக்கத்தைச் சேர்ந்த 5 பேர் சென்னையிலும், மதுரையிலும் கைது செய்யப்பட்டனர். இந்தக் கும்பலுக்கு தலைவராக சம்சுதீன் என்ற கருவா சம்சுல் செயல்பட்டுள்ளார்.
    உயிர் சேதம் இன்றி, எதிர்ப்பை காட்டும் வகையில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த வேண்டும் என இந்த இயக்கத்தினர் செயல்பட்டு வந்திருப்பதாக என்.ஐ.ஏ. தரப்பில் கூறப்படுகிறது. 6 இடங்களிலும் ஒரு தொழில்நுட்பத்திலும் ஒரே மாதிரி குண்டு வைத்துள்ளதே, அவர்கள் கைது செய்யப்படுவதற்கு காரணமாகவும் இருந்துள்ளது. 
    லட்சியம் விடியோ தொகுப்பு:குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடங்களில் ஆங்கிலத்தில் ஒரு "பென் டிரைவ்',ஒரு மிரட்டல் கடிதம், ஒசாமா பின்லேடன் படம், இந்திய வரைப்படம் ஆகியவற்றை வீசியுள்ளனர். அந்த "பென் டிரைவில்', போலீஸாருக்கும் எச்சரிக்கை விடுக்கும் வகையிலும்,அடுத்து தாக்குதல் நடத்த போகும் இடம் குறித்தும், தாங்கள் அந்த இடத்தில் தாக்குதல் நடத்துவதற்குரிய காரணம் குறித்த விடியோ காட்சியை பதிவு செய்து வைத்துள்ளனர்.
    இதில் 6 இடங்களிலும் 6 விடியோ காட்சி தொகுப்புகளை அடங்கிய பென் டிரைவை அவர்கள் வீசி சென்றுள்ளனர். ஒரு விடியோ காட்சி தொகுப்பில் 7 நாட்டு தூதரகங்கள் புகைப்படங்கள், அவற்றின் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு காரணங்கள் இருக்கின்றன. இந்திய விமானப்படை மையங்கள், கடற்படை மையங்கள், ராணுவப் பயிற்சி மையங்களும், அரசியல் கட்சித் தலைவர்களின் விடியோ காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன.
    ஆறு விடியோ காட்சி தொகுப்புகளும் "லட்சியம்' என்ற தலைப்பில், கைது செய்யப்பட்ட மென்பொருள் பொறியாளர் தாவூத் சுலைமானே தயாரித்திருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இந்த இயக்கத்தில் உள்ள வேறு யாரெனும் நாசவேலையில் ஈடுபட்டுவிடக் கூடாது என்பதற்காக என்.ஐ.ஏ. அதிகாரிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
    அடுத்த இலக்கு வட மாநிலங்கள்! 
    அடுத்து வட மாநிலங்களில் டிசம்பர் 6 ஆம் தேதி தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டிருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
    5 பேரிடம் நடத்திய விசாரணையில், குஜராத், மத்தியப் பிரதேசம்,மகாராஷ்டிரம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டிருப்பது தெரியவந்துள்ளது.
    மத்தியப் பிரதேசத்தில் அண்மையில் சிறையில் இருந்து தப்பியோடிய சிமி தீவிரவாதிகள் என்கவுன்ட்டர் மூலம் சுட்டுக் கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அங்கு டிசம்பர் 6-இல் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டிருக்கின்றனர்
    இதுதொடர்பாக, என்.ஐ.ஏ. அதிகாரிகளும்,தமிழக தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாரும் விசாரணை செய்து வருகின்றனர்.

    மேலும் ஒருவர் கைது 
    பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய மேலும் ஒருவரை தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மதுரையில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
    மதுரையில் ஞாயிற்றுக்கிழமை அய்யர்பங்களா ஜி.ஆர். நகரைச் சேர்ந்த முகமது அயூப், புதூர் மண்மலை மேட்டைச் சேர்ந்த கரீம்ராஜா, இஸ்மாயில்புரம் 4-ஆவது தெருவைச் சேர்ந்த அப்பாஸ்அலி ஆகிய 3 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தேசிய புலனாய்வுப் பிரிவினர் நடத்தினர். மூவரும் கொடுத்த தகவலின் அடிப்படையில் மதுரை நெல்பேட்டையைச் சேர்ந்த சம்சுதீன் (22) என்பவரும் இந்த இயக்கத்தோடு தொடர்பில் இருப்பதும், சதித்திட்டங்களில் பங்கேற்றதும் தெரிய வந்தது. அதையடுத்து, சம்சுதீனை அவரது வீட்டருகே வைத்து கைது செய்தனர். மேலும் பலர் கைது செய்யப்படலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
    முன்னதாக, அல்காய்தா அடிப்படை இயக்கம் எனும் பெயரில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாக மதுரை, சென்னையில் திங்கள்கிழமை 4 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    3 பேருக்கு திருப்பரங்குன்றம் வெடிகுண்டு வழக்கில் தொடர்பு? 
    இந்த நிலையில், முகமது அயூப், கரீம்ராஜா, அப்பாஸ் அலி ஆகிய 3 பேரிடமும் இடையபட்டியில் உள்ள இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை பயிற்சி முகாம் வளாகத்தில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
    இதுபற்றி போலீஸார் கூறியது:-
    2012-இல் திருப்பரங்குன்றம் மலையில் வெடிபொருள்கள் மீட்கப்பட்ட நிலையில், மதுரையில் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டது. மூவருக்கும், மதுரையில் நிகழ்ந்த வெடிகுண்டு சம்பவங்களில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது என்றனர்.
    இந்த நிலையில், மத அமைப்புகளைக் கண்காணித்து வரும் போலீஸார் கூறியது:-
    மதுரையில் குறிப்பிட்ட போலீஸார் செல்ல முடியாத சூழல் உள்ளது. மத அமைப்புகள் அனுமதிப்பதும் இல்லை. சந்தேகத்துக்குரிய நபர்களை விசாரிக்கக்கூட சிரமப்பட வேண்டியுள்ளது. இந்தப் பகுதிகள் ஓர் ரகசிய உலகம். மீறினால் அரசியல் தலையீடு வருகிறது என்றனர்.
    இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த ஜமாத் நிர்வாகி ஒருவர் கூறியது: ஜமாத் நிர்வாகங்கள் தீவிரவாதச் செயல்களுக்கு இடம் கொடுப்பது இல்லை. சமூக ஊடகங்கள் மூலமாக இளைஞர்களை குறிவைத்து ரகசிய அமைப்புகளின் சார்பில் பிரசாரங்கள் நடத்தப்படுகின்றன. இவர்களது செயல்பாடுகள் இணையம் மூலமாகவே மேற்கொள்வதால் வீட்டில் உள்ளவர்களாலும் கண்டுபிடிக்க முடிவது இல்லை. பிடிபடும்போதுதான் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டது தெரிய வருகிறது. இவர்களின் செயல்களை ஒருபோதும் ஆதரிக்க முடியாது என்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad