தாமாக முன்வந்து வருவாயை அறிவித்தால் ஆதாரம் கேட்கப்படமாட்டாது.
"கணக்கில் காட்டப்படாத பணம் வைத்திருப்போர், தங்களது ஒட்டுமொத்த வருவாயை அறிவித்து, அதற்கு 50 சதவீத வரியைச் செலுத்திவிட்டால், நவம்பர் 10-ஆம் தேதிக்குப் பிறகு வங்கியில் செலுத்தப்பட்ட தொகைக்கு வருமான வரித் துறை ஆதாரம் கேட்காது'' என்று வருவாய்த் துறைச் செயலர் ஹஸ்முக் அதியா கூறினார்.
உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி, கடந்த 8-ஆம் தேதி அறிவித்தார். அதன் பிறகு வங்கிகளில் செலுத்தப்பட்ட கருப்புப் பணத்துக்கு 30 சதவீத வரி, பிடித்தம் செய்யப்பட்ட வரித் தொகைக்கு 33 சதவீத மிகை வரி, 10 சதவீதம் அபராதம் விதிக்கும் வகையில் வருமான வரிச் சட்டத் திருத்த மசோதாவை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து வருவாய்த் துறைச் செயலர் ஹஸ்முக் அதியா, செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
கணக்கில் காட்டப்படாத வருமானத்தை தாமாக முன்வந்து அறிவித்து, அவற்றுக்கு 50 சதவீத வரியைச் செலுத்துவோரிடம் அந்த வருவாய்க்கு ஆதாரம் கேட்கப்படமாட்டாது.
ஆனால், வருமான வரிச் சோதனையின்போது பிடிபட்டால், அந்த தொகைக்கு 85 சதவீதம் வரை வரி விதிக்கப்படும்.
தாமாக முன்வந்து வருமானத்தை தெரிவிப்பவர்கள், சொத்து வரி உள்ளிட்ட வரிச் சட்டங்களில் இருந்து பாதுகாப்பு பெறுவர். ஆனால், அன்னியச் செலாவணிச் சட்டம், பண மோசடி தடுப்புச் சட்டம், கருப்புப் பணச் சட்டம் ஆகியவற்றில் இருந்து அவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்காது.
இதனிடையே, கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள், புதிய ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தி அவற்றை மீண்டும் பதுக்க முயலுகிறார்கள். இதனைத் தடுப்பதற்காக, வருவமான வரிச் சட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் திருத்தப்பட்டுள்ளன.
கருப்புப் பணம் பதுக்குவோர் மனதில் அச்சத்தை உருவாக்கும் வகையில், கருப்புப் பணத்துக்கு எதிராக, டிசம்பர் மாத இறுதிக்குப் பிறகு பிரதமர் மோடி மேலும் பல நடவடிக்கைகளை எடுப்பார் என்றார் ஹஸ்முக் அதியா.
கருத்துகள் இல்லை