Header Ads

 • BREAKING  ரூபாய் நோட்டு விவகாரம்: "பந்த்' நடத்த அழைக்கும் எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி கண்டனம்.

  உத்தரப் பிரதேச மாநிலம், குஷிநகரில் பாஜக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று மக்களைப் பார்த்து கையசைக்கும் பிரதமர் நரேந்திர மோடி. உடன், மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்

  ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை எதிர்த்து பந்த் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ள எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
  மத்திய அரசின் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற நடவடிக்கைக்கு பல்வேறு எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதைக் கண்டித்து திங்கள்கிழமை (நவ.28) நாடு தழுவிய பந்த் போராட்டம் நடத்த சில கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. 
  இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகரில் பாஜக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: 
  கருப்புப் பணத்தையும் ஊழலையும் நாம் தடுத்து வருகிறோம். இந்த நேரத்தில் சிலர் (எதிர்க்கட்சிகள்) பந்த் நடத்த அழைப்பு விடுக்கின்றனர். பாரத் பந்த் நடைபெற வேண்டுமா? அல்லது ஊழலுக்கான வழி அடைக்கப்பட வேண்டுமா? 
  அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற முடிவு மிகவும் கடினமானது. ஆனால் இந்த முடிவால் நமது எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதில் கிராமவாசிகள் உள்பட சாமானிய மக்கள் பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றனர். அவர்கள் இ-வாலட் எனப்படும் செல்லிடப்பேசி வாயிலான பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட வேண்டும்.
  கையில் பணப்பை வைத்துக் கொள்ளும் சகாப்தம் முடிந்து விட்டது. நீங்கள் தற்போது உங்களது செல்லிடப்பேசியையே வங்கிக் கிளையாகப் பயன்படுத்த முடியும். செல்லிடப்பேசியில் படம் எடுத்து அதை நண்பர்களுக்கு எவ்வளவு சுலபமாக அனுப்புவீர்களோ அதைப் போலவே இதையும் செய்ய முடியும். செல்லிடப்பேசிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிய மக்கள் யாரும் வகுப்புகளுக்குச் செல்லவில்லை. அதேபோல் அவர்கள் தற்போது செல்லிடப்பேசிகள் வாயிலாக பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.
  பிரச்னைகள் வரும் என்று நான் ஏற்கெனவே கூறினேன். உங்களிடம் நான் 50 நாள் அவகாசம் கோரியுள்ளேன். இதில் இன்னும் 30 நாள்கள் மீதமுள்ளன. மக்களின் சிரமங்களைப் போக்குவதற்கு அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.
  செல்லிடப் பேசிக்கு சார்ஜ் ஏற்றுவதற்கு நீங்கள் பள்ளிக்கு சென்றா கற்றுக் கொண்டீர்கள்? வாட்ஸ்-அப் செயலியை இயக்கவும் நீங்கள் கற்றுக் கொண்டுள்ளீர்கள். உங்களுக்கு ஒரு வங்கிக் கணக்கு இருந்தால் நீங்கள் விரும்பும் எதையும் வாங்கலாம்.
  ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளது எனக்குத் தெரியும். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசானது ஏழைகள், விவசாயிகள் மற்றும் தலித்துகளுக்காக உறுதிபூண்டுள்ளது.
  சமாஜவாதி அரசு மீது தாக்கு: இந்த மாநிலத்தில் ஆட்சிபுரியும் சமாஜவாதி அரசுக்கு, விவசாயிகளுக்கான மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்துவதில் ஆர்வம் இல்லை. மக்களின் பிரச்னைகள் குறித்து இந்த அரசுக்கு அக்கறை இல்லை.
  சமாஜவாதி கட்சியின் குடும்பச் சண்டை முடிவுக்கு வந்து விட்டால், பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்துங்கள் என்று உத்தரப் பிரதேச அரசிடம் கேட்கிறேன். ஆனால், அதை அவர்கள் செய்ய மாட்டார்கள். பிரச்னைகளைத் தீர்ப்பதில் அவர்களுக்கு ஆர்வமில்லை.
  "உங்களை ஏமாற்ற மாட்டேன்': இந்தப் பிரசாரக் கூட்டத்துக்கு வந்துள்ள உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் இந்த மாநிலத்தில் உள்ள வாராணசி தொகுதியில் நானே போட்டியிட்டேன். அப்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பிரசாரத்துக்காக சென்றேன். ஆனால், கூட்டம் பெரிய அளவில் இருந்ததில்லை.
  இன்றைய கூட்டத்துடன் ஒப்பிடும்போது, இதில் பாதியளவுதான் அப்போது வந்திருக்கும். தற்போது பெண்கள் உள்பட மிகப்பெரிய கூட்டம் எனக்கு ஆசி வழங்க வந்துள்ளது. நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு அடிபணிகிறேன். உங்களை நான் ஏமாற்ற மாட்டேன்.
  அரசுப் பொறுப்பில் உள்ளவர்கள் தங்களை ஆட்சியாளர்கள் என்று கூறிக்கொண்ட காலம் மலையேறி விட்டது. நான் உங்களின் சேவகன். உங்களுக்காக உழைப்பது எனது கடமை. எனக்கு நீங்கள் எவ்வளவோ கொடுத்துள்ளீர்களள். நான் உங்களுக்கு நன்றிக்கடன்பட்டுள்ளேன் என்றார் மோடி.

  கருத்துகள் இல்லை

  Post Bottom Ad