Header Ads

  • BREAKING



    குண்டு வைப்பு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐவர் நீதிமன்றத்தில் ஆஜர்.

    தேசிய புலனாய்வு முகமையும், தெலுங்கானா எதிர் உளவுப் பிரிவு காவல்துறையினரும் மேற்கொண்ட நடவடிக்கைகளில் மதுரையில் 4 பேரும், சென்னையில் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

    சித்தூர், கொல்லம், மைசூர், மலப்புரம், நெல்லூர் ஆகிய இடங்களில் உள்ள நீதிமன்றங்களில் குண்டு வைத்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

    மதுரையில் கைதுசெய்யப்பட்ட அப்பாஸ் அலி, முகமது அயூப், சம்சுதீன், கரீம் ராஜா ஆகிய நான்கு பேரும் இன்று மேலூர் நடுவர் மன்ற நீதிபதி செல்வகுமார் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டனர்.

    சென்னையில் கைதுசெய்யப்பட்ட தாவூத் சுலைமான் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    இவர்கள் ஐந்து பேரும் விசாரணைக்காக பெங்களூர் அழைத்துச் செல்லப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இவர்களில் சென்னையில் கைது செய்யப்பட்ட தாவூத் சுலைமான் மதுரையின் கரீம் ஷா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவர். இவர் சென்னையில் தனியார் மென்பொருள் நிறுவனமொன்றில் பணியாற்றிவந்தார்.

    அப்பாஸ் அலி, மதுரை இஸ்மாயில் புரத்தில் வீடுகளுக்கு வண்ணம் தீட்டுபவராக வேலைபார்த்துவந்தார். கரீம் ராஜா ஒரு கோழி இறைச்சிக் கடை வைத்திருந்தார்.

    இவர்கள் அல் - காய்தா பாணியில் தி பேஸ் மூவ்மெண்ட் என்ற அமைப்பை நடத்திவந்ததாக காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. தாவூத் சுலைமான் இவர்களது தலைவராக செயல்பட்டுவந்தார்.

    கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி சித்தூர் நீதிமன்ற வளாகத்தின் வாகனம் நிறுத்தும் இடத்தில் குண்டு ஒன்று வெடித்தது.

    அதற்குப் பிறகு, கொல்லத்தில் ஜூன் 15ஆம் தேதியன்று நீதித்துறை நடுவர் மன்றத்தில் கார் நிறுத்துமிடத்தில் குண்டுவெடித்தது. ஆகஸ்ட் 1-ஆம் தேதி மைசூர் நீதிமன்ற வளாகத்திலும் நவம்பர் ஒன்றாம் தேதி மலப்புரத்தில் உள்ள நீதிமன்றக் கழிப்பறையிலும் குண்டுகள் வெடித்தன.

    இந்தக் குண்டுவெடிப்புகளில் யாரும் மரணமடையவில்லை. அச்சத்தை ஏற்படுத்துவதே அவர்கள் நோக்கமென காவல்துறை கருதுகிறது.

    நெல்லூர், மலப்புரம் ஆகிய இடங்களில் குண்டுகள் வெடித்த இடங்களில் பேஸ் மூவ்மெண்ட் பெயரில் துண்டுப்பிரசுரங்கள் கிடைத்ததாக என்ஐஏ தெரிவிக்கிறது.

    கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து செல்போன்கள், கணிணியின் ஹார்ட் டிஸ்குகள் போன்றவை கைப்பற்றப்பட்டதாக என்ஐஏவின் செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது.

    கைது செய்யப்பட்டவர்கள் யாரும் மதுரையில் எந்த வழக்கிலும் சம்பந்தப்படாதவர்கள் என மதுரை நகரக் காவல்துறை தெரிவித்திருக்கிறது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad