Header Ads

 • BREAKING  சாமானியர்களுக்கான இலவச சட்ட உதவி மையம்.

  பிறக்கும்போது மனிதர்கள் எவரும் குற்றவாளிகளாக பிறப்பதில்லை. சில சூழ்நிலைகளின் காரணமாகத்தான் மனிதர்கள் பெரும்பாலும் குற்றவாளியாகிறார்கள். அதனால்தான் சிறைச் சாலைகளில் “குற்றத்தை வெறு, குற்றவாளிகளை வெறுக்காதே” என்ற வாசகம் இருக்கும்.
  ‘சட்டம் ஒரு இருட்டறை, அதில் வழக்கறிஞரின் வாதம் விளக்கு’ என்றார் அறிஞர் அண்ணா. இப்போது அதிகமாக மனிதப் பேராசைகளாலும் ஆத்திரத்தாலும் வக்கிர எண்ணங்களாலும் குற்றங்கள் நிகழ்கின்றன. நீதிமன்றப் படிகளில் ஏறும்போதுதான் தன் தவறை சிலர் உணர்கிறார்கள். வாய்தா, வாய்தா என்று ஆண்டுக் கணக்கில் நீளும் வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன. மெத்தப் படித்தவர்களுக்கே சட்டத்தின் நுணுக்கங்கள் முழுதும் தெரியாது. நிறைய பணம் செலவழித்து வழக்கறிஞர் மூலம் தங்கள் வழக்கை நடத்துகிறார்கள். இதில் கிராமங்களில் வசிக்கும் மக்கள் அடிப்படை சட்ட உரிமைகளை அறியாமல் உள்ளனர். வழக்கு என்று வந்த பிறகு யாரை நாடுவது எப்படி வழக்கை கொண்டு செல்வது என்று திக்குத் தெரியாமல் இருப்பார்கள்.
  கல்லாமை, கற்றறிந்த ஒரு சிலரும் சட்ட விழிப்புணர்வு இல்லாமையால் தவறான நபர்களிடம் சிக்கிக் கொண்டு நாட்களையும் பணத்தையும் வீணாக இழப்பார்கள். இந்தக் குறைகளை நீக்க வந்ததுதான் இலவச சட்ட உதவி மையங்கள். இலவச சட்டம் குறித்து குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 304-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் வழக்கறிஞர்  வைத்து தன் வழக்கை வாதாடுவதற்கு உரிமை வழங்க வேண்டும் என வற்புறுத்துவதன் நோக்கம்தான் இலவச சட்டத்தின் அம்சமாகும்.
  தனது குடிமக்களுக்கு நீதியை வழங்க வேண்டியது அரசின் முக்கிய கடமை. நீதியைப் பெறுவதற்காக பல குடிமக்களுக்கு வழக்கறிஞரின் உதவி தேவைப்படுகிறது. ஒரு நாளைக்கு ஐந்து லட்சம் கட்டணம் பெறும் வழக்கறிஞர்கள் முதல் ஐம்பது ரூபாய் வாங்கும் வழக்கறிஞர்கள் வரை இருக்கிறார்கள். ஆனால், அந்த ஐம்பது ரூபாயைக் கூட கொடுக்க முடியாத மக்களும் நமது நாட்டில் உண்டு. அவர்களுக்கும், நீதியை அளிப்பதற்காகவே, அரசு இலவச சட்ட உதவியை அளிக்கிறது. அதாவது, வழக்கறிஞர் கட்டணத்தை தானே செலுத்த வேண்டிய கட்டாயம், மக்கள் நலம் பேணும் அரசிற்கு  உண்டு.
  வழக்கறிஞர்கள் வைத்து வழக்கு நடத்த முடியாத ஏழை எளியவர்களுக்கு அரசாங்கமே வழக்கறிஞர் வைத்து வழக்கு நடத்திக் கொள்வதற்கு வழிவகைகள் அந்த சட்டமே வழி செய்து கொடுக்கிறது. இதற்குண்டான செலவுகளை அரசாங்கமே இவ்வழக்கறிஞர்களுக்கு கொடுக்கிறது. இதுதான் இலவச சட்ட உதவி மையங்களின் நோக்கம். ஆனால் அரசாங்கம் தனக்கு சரியாக கட்டணம் கொடுக்க காலதாமதம் ஆகும் என்று எண்ணி சில வழக்கறிஞர்கள் வழக்கை நடத்த முன்வர மாட்டார்கள் என்பதும் நடைமுறை உண்மை.
  ஒவ்வொரு மாவட்டத்திலும் இலவச சட்ட உதவி மையம் இயங்கிக் கொண்டிருக்கின்றது.  அனைத்து மாநிலத் தலைநகரங்கள், மாவட்ட தலைநகரங்கள் மற்றும் எங்கெல்லாம் நீதிமன்றங்கள் உள்ளனவோ அங்கெல்லாம் சட்ட உதவிக் குழுக்கள் செயல்படுகின்றன. வசதியற்றவர்கள் தம் வழக்குகளை நடத்த அரசு தரப்பில் வழக்கறிஞர் வைத்துத் தரவேண்டும் என விருப்பப்பட்டால் இந்த இலவச சட்ட மையத்திற்கு இது குறித்து மனு கொடுக்க வேண்டும். உங்கள் வழக்குகளை அரசுத்தரப்பில் நடத்தித் தர உடனடி நடவடிக்கை எடுத்துத் தரப்படும்.
  பாதிக்கப்பட்ட ஏழ்மையான முதியவர்களும், பெண்களுக்கான வழக்கு, ஜீவனாம்ச வழக்கு, வரதட்சணை வழக்கு, நிலம் பங்கு பிரிப்பு வழக்கு போன்றவைகளை எந்த ஒரு செலவும் இல்லாமல் இலவச சட்ட உதவி மையம் மூலமாக செய்துமுடித்து பயன்பெறலாம். மேலும் பொது மக்கள் சட்ட உதவிகளை கேட்டு அணுகும்போது, அவர்கள் விரும்பும், அவர்கள் பிரச்சனை தொடர்பான சட்டத்துறையில் அனுபவம் வாய்ந்த வழக்கறிஞரை தேர்வு செய்து கொள்ளவும் தமிழ்நாடு சட்டஉதவி மற்றும் ஆலோசனைக் கழகம் வாய்ப்பளிக்கிறது.
  பணம் உள்ளவர்களால் மட்டுமே நீதித்துறையில் வழக்காட முடியும் என்ற நிலையை மாற்றி எழை எளிய மக்களும் இந்த இலவச சட்ட உதவி மையத்தின் வாயிலாக நீதிமன்றங்களை அணுக வேண்டும் என்பதே சட்ட உதவி மையங்களின் உன்னத நோக்கம். பல வழக்கறிஞர்கள் தங்களின் சொந்த செலவிலும் குறைந்த கட்டணத்திலும் ஏழைகளுக்கு வழக்காடுகின்றனர்.
  சில ஆண்டுகளுக்கு முன் தனியார் இலவச சட்ட ஆலோசனை மையங்கள் செயல்பட்டன. ஆனால் அவைகளில் சில அமைப்புகள் பணத்திற்காக கட்டப் பஞ்சாயத்து நடத்தும் மையங்களாக செயல்பட்டதால் நீதிமன்றம் தனியார் சட்ட உதவி அமைப்புகளுக்குத் தடை விதித்தது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சட்ட உதவிக்கு வகை செய்கின்ற பிரிவு சேர்க்கப்படுவதற்கு முன்னரே தமிழகத்தில் சட்ட உதவிக்கான இயக்கம் ஒரு முன்னோடி இயக்கமாக உருவானது. 19.11.1976 அன்று “தமிழ்நாடு சட்ட உதவி மற்றும் ஆலோசனைக் கழகம்’ தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது.
  சாமானிய ஏழை எளிய மக்கள்- நீதி மன்றத்தையும் சட்ட நடவடிக்கைகளையும் எண்ணி அஞ்சிடாமல் தங்களுக்குத் தேவையான அனைத்து சட்ட ஆலோசனைகளைப் பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வரும் இலவச சட்ட உதவி மையங்களை மக்கள் நாடி பயன் பெற வேண்டும்.
  ஆதாரம் : சிறகு நாளிதழ்.

  கருத்துகள் இல்லை

  Post Bottom Ad