Header Ads

 • BREAKING  ரூ.100 கோடி, 120 கிலோ தங்கம் ஒரே தொழிலதிபரிடம் பறிமுதல்: அரசு உயர் அதிகாரி, அரசியல்வாதிகள் சிக்குகின்றனர்.

  தொழிலதிபரின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், ரூ.100 கோடி பணம், 120 கிலோ தங்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தமிழக அரசின் உயர் அதிகாரியும், அரசியல்வாதிகளும் சிக்குவதாக வருமான வரித் துறையினர் தெரிவித்தனர்.
  இதுகுறித்து வருமான வரித் துறையினர் தரப்பில் கூறப்பட்டதாவது:
  தமிழகத்தில் மணல் விற்பனையில் ஈடுபட்டு வரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கனிமவள தனியார் நிறுவனம், அரசு உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள் துணையோடு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு பணத்தை ஈட்டுவதாகவும், வரி ஏய்ப்பு செய்வதாகவும் வருமான வரித் துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தன. 
  அந்தப் புகார்களின் அடிப்படையில் சென்னை தியாகராய நகரில் வசிக்கும் அந்தத் தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் சேகர் ரெட்டியின் வீடு, அவரது கூட்டாளிகள் தியாகராய நகர் விஜயராகவ சாலையில் உள்ள சீனிவாச ரெட்டியின் வீடு, மேற்கு முகப்பேரில் உள்ள பிரேமின் வீடு, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஆந்திரா கிளப், சேகர் ரெட்டியின் சொந்த ஊரான வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே காந்தி நகரில் உள்ள வீடு உள்ளிட்ட 8 இடங்களில் வருமான வரித் துறையினர் வியாழக்கிழமை காலை ஒரே நேரத்தில் அடுத்தடுத்து அதிரடி சோதனை நடத்தச் சென்றனர்.
  இந்தச் சோதனை காலை 9 மணிக்கு தொடங்கியது. சோதனையில் வருமான வரித் துறையினர் 8 குழுக்களாக 160 பேர் ஈடுபட்டனர். அப்போது, வருமான வரித்துறையினரே மலைக்க வைக்கும் வகையில் பண நோட்டுகளும்,தங்கமும் கிடைத்தன.
  முக்கியமாக, கணக்கில் வராத ரூ.100 கோடி பணம், 120 கிலோ தங்க நகைகள், தங்கக் கட்டிகள் வியாழக்கிழமை இரவு வரை பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித் துறையினர் தெரிவித்தனர். ரூ.100 கோடி பணத்தில் ரூ.10 கோடி மட்டுமே புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாகும்.
  மணல் மோசடி என புகார்: வருமான வரித்துறையினர் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் பின்வருமாறு:-
  தமிழக அரசியலில் அதிகார மையங்களான 2 பேருக்கு சேகர் ரெட்டி பினாமியாகச் செயல்பட்டிருக்கிறார். சேகர் ரெட்டியின் அனைத்து விதிமீறல்களுக்கும் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் துணையாக இருந்துள்ளனர். சேகர் ரெட்டி தமிழக அரசு நடத்தும் குவாரிகளில் அள்ளப்படும் மணலை அரசு நிர்ணயித்த குறைந்த விலைக்கு வாங்குவதுபோல முடக்கி வைத்துக் கொண்டு, அந்த மணலை அதிக விலைக்கு கட்டுமான நிறுவனங்களுக்கும், வியாபாரிகளுக்கும் விற்றுள்ளார்.
  இதற்கு அரசு விதிக்கும் மதிப்புக் கூட்டு வரி உள்ளிட்ட எந்த வரியையும் செலுத்தாமலேயே சேகர் ரெட்டி விற்றுள்ளார். அதேபோல சில இடங்களில் அரசு நிர்ணயித்த அளவைக் காட்டிலும் குறைவான அளவு மணலை, அதிக விலைக்கும் விற்றுள்ளார்.
  இவ்வாறு கடந்த 3 மாதங்களில் மட்டும் ரூ.100 கோடி வரை பணம் ஈட்டியிருப்பதை வருமான வரித்துறை புலனாய்வு விசாரணையின் மூலம் கண்டறிந்துள்ளது. மேலும் கைப்பற்றப்பட்ட பணத்தில் பெரும்பகுதி சேகர் ரெட்டி, சீனிவாச ரெட்டி வீடுகள், அலுவலகங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.
  அதேபோல ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததும், சேகர் ரெட்டி தான் சிக்கலில் மாட்டிவிடக் கூடாது என்பதற்காக தன்னிடம் மணல் வாங்கும் அனைவரிடமும் ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டே தர வேண்டும் என கட்டாயப்படுத்தி வாங்கியுள்ளார். பழைய ரூபாய் நோட்டுகளை வழங்கியோருக்கு, மணலை அவர் விற்கவில்லை என கூறப்படுகிறது.
  வியாழக்கிழமை காலை தொடங்கிய சோதனை நள்ளிரவையும் தாண்டி நீடித்தது. அதிகமான பணம்,தங்கநகை,ஆவணங்கள் பிடிபடுவதால் சோதனை முடிவடைவதற்கு இரு நாள்கள் ஆகும் என வருமான வரித்துறை தரப்பில் கூறப்படுகிறது.

  அரசு அதிகாரி சிக்குகிறார்: அதேவேளையில் இந்த வழக்கில் சேகர் ரெட்டியுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள், அரசு உயர் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த வருமான வரித் துறையினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் அவர்கள் வீடுகளிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
  வருமான வரித்துறையின் இந்த அதிரடி சோதனை, அரசியல்வாதிகளிடமும், ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ். அதிகாரிகளிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  திருமலை திருப்பதி கோயில் தேவஸ்தானத்தில் அறங்காவலர் குழு உறுப்பினராக சேகர் ரெட்டி இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

  காட்பாடி வீட்டுக்கு "சீல்'

  காட்பாடி காந்தி நகரில் உள்ள தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கு சொந்தமாக அருகருகே உள்ள 2 வீடுகளில் வியாழக்கிழமை சோதனையிடச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்கள் இல்லாததால் வீட்டை பூட்டி "சீல்' வைத்தனர்.
  வேலூர் வருமான வரித் துறை துணை ஆணையர் முருகபூபதி தலைமையிலான அதிகாரிகள் சோதனைக்காக வியாழக்கிழமை பிற்பகலில் சென்றனர். வீடு பூட்டப்பட்டிருந்ததால் நீண்ட நேரம் காத்திருந்தனர். பின்னர் அந்த வீட்டின் காவலாளியிடம் சாவியைப் பெற்று, மாலையில் வீடு திறக்கப்பட்டு உள்ளே சென்ற அதிகாரிகள் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு வெளியே வந்து வீட்டைப் பூட்டி "சீல்' வைத்தனர். இதுகுறித்து வருமானவரித் துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, "வருமான வரித் துறை சட்டத்தின்படி வீட்டின் உரிமையாளர்கள் இருந்தால் தான் சோதனை நடத்த முடியும். சேகர் ரெட்டி வீட்டில் யாரும் இல்லாத காரணத்தினால் பூட்டி "சீல்' வைக்கப்பட்டுள்ளது' என்றனர்.

  வருமான வரித்துறையின் மிகப் பெரிய வேட்டை 
  தமிழகத்தில் அண்மையில் வருமான வரித் துறை நடத்திய சோதனையில், இந்தச் சோதனையிலேயே மிக பெரியளவில் பணம், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
  வரி ஏய்ப்பு, கருப்புப் பணம், ஹவாலா பணம் உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபடுவர்கள் மீது வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளிலும், அலுவலகங்களிலும் சோதனை நடத்தி வரி செலுத்தாமலும்,கணக்கு காட்டாமலும் இருக்கும் பணத்தையும், தங்கம் உள்ளிட்ட நகைகளையும் பறிமுதல் செய்து வருகின்றனர். சொத்து ஆவணங்களையும் அந்தத் துறையினர் கைப்பற்றுகின்றனர்.
  இவ்வாறு தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்ட சோதனையில், இந்தச் சோதனையிலேயே அதிகப்படியான பணமும்,தங்கநகையும் கைப்பற்றப்பட்டிருப்பதாக வருமான வரித்துறையினர் தெரிக்கின்றனர்.
  இன்னும் சோதனை நடைபெற்றுக் கொண்டிருப்பதால், சோதனையின் முடிவில்தான், கணக்கு காட்டப்படாமல் இருக்கும் பணம், தங்க நகைகள், தங்கக் கட்டி ஆகியவற்றின் முழு விவரம் தெரியவரும் அந்தத் துறையின் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

  செல்லிடப்பேசியில் சிக்கினார்...! 
  செல்லிடப்பேசி பேச்சு மூலமே மணல் முறைகேடு குறித்த தகவல்களை வருமான வரித்துறையினர் சேகரித்து இருக்கின்றனர்.
  சேகர் ரெட்டி குறித்து 6 மாதங்களுக்கு முன்பே வருமான வரித்துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தன. அந்தப் புகாரின் அடிப்படையில் வருமான வரித் துறையினர் சேகர் ரெட்டி குறித்தான தகவல்களை ரகசியமாக சேகரித்தனர்.
  மேலும் அவரது செல்லிடப்பேசி பேச்சுகளை வருமான வரித்துறையினர் ரகசியமாக ஓட்டு கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது தமிழக அரசின் உயர் பதவியில் இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், பிரபல அரசியல்வாதியின் மகனும் சேகர் ரெட்டியிடம் தினமும் செல்லிடப்பேசி மூலம் பேசியிருக்கின்றனர்.
  மேலும், மணல் முறைகேட்டில் கிடைக்கும் பணம், அதை பதுக்குவது, பங்கு போடுவது என பலவாறு அவர்கள் பேசிய உரையாடல்களை கேட்டு வருமான வரித்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.
  இந்த ஆதாரத்தின் அடிப்படையிலேயே மிகவும் செல்வாக்கான நபராக திகழ்ந்த சேகர் வீட்டிலும், அவரது கூட்டாளி வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தச் சென்றிருக்கின்றனர்.

  கருத்துகள் இல்லை

  Post Bottom Ad