உயர் நீதிமன்ற காலிப் பணியிடங்கள்: ஓய்வுபெற்ற 18 நீதிபதிகள் பெயர் பரிந்துரை.
ஆந்திரம், கொல்கத்தா உள்ளிட்ட 4 உயர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களுக்கு ஓய்வுபெற்ற 18 நீதிபதிகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்தப் பரிந்துரையை சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளனர்.
அதுகுறித்து விரைவில் பரிசீலித்து அரசு முடிவெடுக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் 24 உயர் நீதிமன்றங்களில் 450 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளதாகத் தெரிகிறது. இதன் காரணமாக மூன்று கோடிக்கும் அதிகமான வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.
ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருந்து, அவற்றுக்கு விரைவில் தீர்வு காண முடியாத அசாதாரண சூழல் இருந்தால், ஓய்வு பெற்ற நீதிபதிகளை மீண்டும் நியமிக்கலாம் என்று அரசியல் சாசனத்தில் அண்மையில் புதிய ஷரத்து சேர்க்கப்பட்டது.
இதற்கு மத்திய அரசும், நீதித்துறையும் ஒப்புதல் தெரிவித்தன. அதன்படி, நேர்மையும், திறமையும் மிகுந்த நீதிபதிகள் ஓய்வுபெற்றிருந்தாலும் கூட, அவசியம் கருதி அவர்களை மீண்டும் நியமிப்பதற்கு அந்தப் புதிய சட்டவிதியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் ஓய்வுபெற்ற நீதிபதிகளின் பெயர்களை மத்திய அரசுக்கு பரிந்துரைக்க முடியும்.
அவ்வாறு ஆந்திரம் / தெலங்கானா, கொல்கத்தா, மத்தியப் பிரதேசம், அலகாபாத் ஆகிய உயர் நீதிமன்றங்களில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களுக்கு 18 ஓய்வுபெற்ற நீதிபதிகளின் பெயர்களை சம்பந்தப்பட்ட தலைமை நீதிபதிகள் பரிந்துரை செய்துள்ளனர். அந்தப் பெயர்களைப் பரிசீலித்து வரும் மத்திய அரசு, இதுதொடர்பாக விரைவில் முடிவெடுக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை