பயிற்சி பெறும் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை, முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு.
புதுச்சேரி: பயிற்சி பெறும் இளம் வழக்கறிஞர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என, முதல்வர் நாராயணசாமி பேசினார்.புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் சட்ட நாள் விழா கொண்டாடப்பட்டது.இதனையொட்டி வழக்கறிஞர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதன் பரிசளிப்பு விழா ஓட்டல் சன்வேயில் நேற்று நடந்தது.புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் திருக்கண்ணச்செல்வன் வரவேற்றார். சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் தேவதாஸ், கார்த்திகேயன், புதுச்சேரி சட்டத் துறை செயலர் செந்தில்குமார், புதுச்சேரி மாவட்ட தலைமை நீதிபதி ரமா திலகம், ஐகோர்ட் மூத்த வழக்கறிஞர் காந்தி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.25 ஆண்டுகள் பணி புரிந்த சீனியர் வழக்கறிஞர்களுக்கு நினைவு பரிசு வழங்கி முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:இந்திய அரசியலைப்பு சட்டம் அனைவருக்கும் சம உரிமை அளிக்கும் வகையில் அம்பேத்கரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதனால் தான் மங்கோலியா, நேபாளம் போன்ற பிற நாடுகளும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்றி, தங்களது சட்டத்தை வடிவமைத்துள்ளன. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் கொண்டு வந்தாலும் அதனுடைய அடிப்படை இன்னும் மாறாமல் உள்ளது.அது தான் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தனிச்சிறப்பு.நாடு முழுவதும் கோர்ட்டுகளில் நீதிபதி இடங்கள் காலியாக உள்ளது. காங்.,ஆட்சி காலத்தில் நீதிபதி பணியிடங்களை நிரப்ப இரண்டு மாதங்களுக்கு முன்கூட்டியே நடவடிக்கை தொடங்கி விடும்.இது நீதிமன்றங்களின் தவறு அல்ல. மத்திய அரசிற்கும் நீதிபதி பணியிடங்களை நிரப்பும் பொறுப்பு உண்டு.புதுச்சேரியில் பயிற்சி பெறும் இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் வழங்க வேண்டும் என, நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.புதுச்சேரி பயிற்சி பெறும் இளம் வழக்கறிஞர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். அத்துடன் வழக்கறிஞர் சேம நிதிக்கு 20 லட்சம் ரூபாய் அளிக்கப்படும்.புதுச்சேரி நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளது.
இவற்றை நிரப்ப சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்படும்.புதுச்சேரி பிராந்தியத்தில் சி.பி.ஐ.,மகளிர், முதியோர், குழந்தைகளுக்கென தனி கோர்ட்டும், காரைக்கால், ஏனாமில் தொழிலாளர் கோர்ட் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான கோப்பு, சென்னை ஐகோர்ட் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு முதல்வர் பேசினார்.இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி பார் கவுன்சில் துணை தலைவர் கமலா குமார், பொது செயலாளர் தனசேகரன், பொருளாளர் நாராயண குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை