Header Ads

  • BREAKING



    காஷ்மீரில் போராட்டம் நடத்துவதற்கு சட்டவிரோதமாக நிதி செல்கிறது: மத்திய அரசு.

    காஷ்மீரில் போராட்டம் நடத்துவதற்காக பயங்கரவாதிகளுக்கு "ஹவாலா' உள்ளிட்ட பல்வேறு வழிகளில் சட்டவிரோதமாக நிதி செல்கிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    இதுதொடர்பாக மாநிலங்களவையில் புதன்கிழமை எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதில்:
    காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஆர்ப்பாட்டத்தை ஊக்குவிப்பதற்காக சட்டவிரோதமான முறையில் பயங்கரவாதிகளுக்கு நிதி அனுப்பப்பட்டு வருகிறது.
    இந்த ஆண்டில் கடந்த அக்டோபர் வரை எல்லை தாண்டி ஜம்மு-காஷ்மீருக்கு அத்துமீறி ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் என சந்தேகிக்கும் 24 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். நிகழாண்டில் அக்டோபர் மாதம் வரை எல்லை வழியாக காஷ்மீருக்குள் நடைபெற இருந்த 201 ஊடுருவல் முயற்சிகளை ராணுவத்தினர் முறியடித்தனர். இதேபோல், எல்லை வழியாக பஞ்சாப் மாநிலத்துக்குள் நடைபெற இருந்த 30 ஊடுருவல் முயற்சிகளும் முறியடிக்கப்பட்டன. 
    கடந்த செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் எல்லையில் அத்துமீறி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் 5 பேர் வீரமரணம் அடைந்தனர். 9 பேர் காயமடைந்தனர் என்று அதில் கிரண் ரிஜிஜு குறிப்பிட்டுள்ளார்.
    இதுதொடர்பாக எழுப்பப்பட்ட மற்றொரு கேள்விக்கு மற்றொரு மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் கூறுகையில், "உளவு பார்ப்பதற்காக பாகிஸ்தானிலிருந்து புறாக்கள் அனுப்பப்படுவது குறித்து தகவல் இல்லை. எனினும், பிடிபடும் சில புறாக்களில் பாகிஸ்தான் தொலைபேசி எண், அந்தத் தொடர்பை வைத்திருக்கும் நபரின் பெயர் எழுதப்பட்டு ஒரு சீட்டில் அனுப்பி வைக்கப்பட்டது கண்டறியப்பட்டது' என்றார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad