பண மதிப்பிழப்பு அவசர சட்டம்.. ஏன்?
பண மதிப்பிழப்பு தொடர்பான அவசர சட்டத்திற்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. பண மதிப்பிழப்பு தொடர்பான அரசாணை ஏற்கனவே வெளியான பிறகு ஏன் இந்த அவசரச் சட்டம் என்று சிலரது மனதில் கேள்விகள் எழலாம். அதற்கான காரணத்தை தெரிந்து கொள்வோம்.
கறுப்பு பணம் மற்றும் கள்ள பணத்தை ஒழிக்கும் விதமாக நாடு முழுவதிலும் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் 8-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். இதனையடுத்து மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்துகொள்ள வரும் டிசம்பர் 30-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அவகாசம் முடிய இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில், பண மதிப்பிழப்பு தொடர்பான அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி மார்ச் 31-ஆம் தேதிக்கு பிறகு செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் தாள்களை 10-க்கும் மேல் வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது. மேலும் சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
அவசர சட்டம் ஏன்?
ஒவ்வொரு ரூபாய் நோட்டிலும் அந்த ரூபாய் நோட்டு மதிப்பிலான பணத்தை, அதனை வைத்திருப்பவரிடம் தருவதாக உறுதி அளித்து ரிசர்வ் வங்கியின் ஆளுநர் கையொப்பம் இட்டிருப்பார். அதன்படி ரூபாய் நோட்டுகளின் மீது அதற்குரிய மதிப்பை அளிக்க வேண்டும் என்பது மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு உள்ள பொறுப்பு ஆகும்.
இந்தப் பொறுப்பு சம்பந்தப்பட்ட மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் தொடர்பாக மத்திய அரசையோ ரிசர்வ் வங்கி ஆளுநரையோ கட்டுப்படுத்தக் கூடாது எனில், அந்த நோட்டுகள் செல்லாதவை என வெறும் அரசாணை மட்டும் போதாது. சட்டப்படி அவற்றைச் செல்லாதவை என அறிவிக்க வேண்டும். எனவே ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்யை சட்டமாக்கும் முயற்சியில் தான் மத்திய அமைச்சரவை இன்று அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
கருத்துகள் இல்லை