ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணிக்கான முதன்மைத் தேர்வு தொடங்கியது.
சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான முதன்மைத் தேர்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 24 வகையான குடிமைப் பணிகளுக்கான அகில இந்திய தேர்ர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.இ) நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கு மொத்தம் 1079 பணிகளுக்கான முதல்நிலை தேர்வை கடந்த ஆகஸ்ட் மாதம் நாடு முழுவதும் 9 லட்சம் பேர் எழுதினர். தமிழகத்தில் இருந்து 17 ஆயிரம் பேர் எழுதினர். இதற்கான தேர்வு முடிவு கடந்த செப்டம்பர் மாதம் 16-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் 15,445 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான முதன்மைத் தேர்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று கட்டுரைத் தாள் தேர்வும், 5 மற்றும் 6-ஆம் தேதி பொது அறிவு தேர்வுகளும், 7-ஆம் தேதி தமிழ் மற்றும் ஆங்கில கட்டாய தேர்வும் நடக்கிறது. அதைத் தொடர்ந்து 9-ஆம் தேதி விருப்பப்பாட தேர்வு நடக்கிறது.
சென்னையில் எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி, காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி, அசோக் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் கல்வி நிறுவனம் ஆகியவற்றில் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.
தேர்வு மையங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், போலீஸ் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு அறைக்குள், செல்லிடப்பேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை