Header Ads

  • BREAKING



    மணல் கடத்தலை தடுக்க முயன்ற கிராம உதவியாளர் லாரி ஏற்றி கொலை.

    சென்னை: செங்கல்பட்டு அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற கிராம உதவியாளர், லாரி ஏற்றி கொல்லப்பட்டார். இதை கண்டித்து மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.செங்கல்பட்டு அடுத்த உள்ளாவூரை சேர்ந்தவர் மணி (45). உள்ளாவூர் ஊராட்சி கிராம உதவியாளராக பணியாற்றினார். இவருக்கு சவுரியம்மாள் என்ற மனைவியும், வினோத் என்ற மகனும் உள்ளனர். நேற்று அதிகாலை 5 மணியளவில், மணியின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், 'உள்ளாவூர் பாலாற்றில் இருந்து மணல் கடத்தப்படுகிறது. முடிந்தால் தடுத்து நிறுத்துங்கள்' என கூறிவிட்டு தொடர்பை துண்டித்தார். இதையடுத்து மணல் கடத்தல் நடைபெறும் இடத்துக்கு மணி நடந்து சென்றார்.

    ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த சவுரியம்மாள், கணவனை ேதடி சென்றார். அப்போது, உள்ளாவூர் ரயில்வே கேட் அருகே ரத்த வெள்ளத்தில் மணி சடலமாக கிடந்தார். அருகில் மணல் சிதறிக்கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சவுரியம்மாள் அலறி துடித்தார். சத்தம் கேட்டு கிராம மக்களும், உறவினர்களும் அங்கு திரண்டனர்.தகவலறிந்து பாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, மணியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். 

    இதனிடையே மணல் லாரியை ஏற்றி மணியை கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோஷமிட்டனர். பின்னர், பாலூர் காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அங்கிருந்த எஸ்.ஐ., தமிழ்செல்வியிடம், 'மணல் லாரி ஏற்றி மணியை கொலை செய்தவரை உடனே கைது செய்ய வேண்டும்' என்று கோஷமிட்டனர். 
    பின்னர் செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில் 2 இடத்தில் அமர்ந்து மறியல் செய்தனர். அதனால் போக்குவரத்து பாதித்தது. தகவலறிந்து வந்த போலீசார், மறியலை கைவிட்டு கலைந்து செல்லும்படி எச்சரித்தனர். அப்போது, 'உள்ளாவூர், ஆத்தூர், பழையசீவரம், சங்கராபுரம், மேலசேரி, வில்லியம்பாக்கம் பகுதி பாலாற்றில் இருந்து லாரிகள், டிராக்டர், மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்தல் நடக்கிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் மணல் கடத்தலுக்கு உடந்தையாக செயல்படும் போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் தெரிவித்தனர். 

    இதற்கு பதில் அளித்த போலீசார், விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதை ஏற்று மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மணல் திருட்டை தடுக்கமுயன்றபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மணல் லாரி ஏற்றி மணி கொல்லப்பட்டாரா அல்லது லாரி மோதியதில் அவர் இறந்தாரா? என விசாரிக்கின்றனர். இச்சம்பம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தொடர் சம்பவங்கள்
    கடந்த 24ம் தேதி கல்பாக்கம் அடுத்த கூவத்தூரில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற துணை தாசில்தார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மீது போலீசார் முன்னிலையிலேயே சரமாரி தாக்குதல் நடத்தப்பட்டது. 2006ம் ஆண்டு செங்கல்பட்டு அடுத்த மணப்பாக்கம் பாலாற்று பகுதியிலும் மணல் கொள்ளையை தடுக்க சென்ற துணை தாசில்தார் வெங்கடேசன், லாரி ஏற்றி கொல்லப்பட்டார்.

    செயல்படாத கண்காணிப்பு குழு
    கல்பாக்கம் சம்பவத்தை தொடர்ந்து கலெக்டர் உத்தரவின்படி மணல் கடத்தல் தடுப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. செங்கல்பட்டு, மதுராந்தகம், காஞ்சிபுரம் சப்-கலெக்டர்கள் தலைமையில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், மதுராந்தகம், செங்கல்பட்டு, செய்யூர், திருக்கழுக்குன்றம், தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வார்கள் தலைமையில் தலா 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் இதுவரை யாரையும் பிடிக்கவில்லை.

    ஒருவர் போலீசில் சரண்
    கிராம உதவியாளர் மணி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக பழைய சீவரம் சின்னகாலனியை சேர்ந்த மோகன் (42) என்பவர், பாலூர் காவல் நிலையத்தில் நேற்று மாலை சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad