Header Ads

  • BREAKING



    குறைந்த எரிபொருளுடன் மம்தா சென்ற விமானம் இயக்கம்? பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விசாரணை.

    குறைந்த எரிபொருளுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சென்ற விமானம் இயக்கப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து விசாரிக்க பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
    பாட்னாவிலிருந்து கொல்கத்தா செல்லும் இண்டிகோ நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் புதன்கிழமை இரவு புறப்பட்டது.
    அந்த விமானத்தில் மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி பயணம் செய்தார்.
    கொல்கத்தா விமான நிலையத்தை அந்த விமானம் அடைந்தபோது நிலையத்தில் அதிக போக்குவரத்து நெரிசல் இருந்ததால் விமானம் தரையிறங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
    இதையடுத்து, அந்த விமானமும், கொல்கத்தாவுக்கு வந்த ஏர் இந்தியா மற்றும் ஸ்பைஸ்ஜெட் விமானங்களும் வானிலேயே சிறிது நேரம் வட்டமடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 
    அதைத் தொடர்ந்து, விமான நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் குறைந்த பிறகு அந்த விமானங்கள் தரையிறங்கின.
    இந்த நிலையில், மம்தா பானர்ஜி பயணம் செய்த விமானத்தில் போதிய அளவு எரிபொருள் இல்லை என்று கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்ததாகவும், அதைப் பொருள்படுத்தாமல், விமானம் தரையிறங்குவதற்கு அதிகாரிகள் தாமதமாக அனுமதி வழங்கியதாகவும் நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வியாழக்கிழமை குற்றம் சாட்டினர்.
    ரூபாய் நோட்டுகள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி மிகத் தீவிரமாகப் போராடி வரும் நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளதற்கு சதிவேலை காரணமாக இருக்கலாம் என சிலர் சந்தேகம் எழுப்பினர்.
    இதற்கு மக்களவையில் பொது விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜுவும், மாநிலங்களவையில் இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹாவும் அளித்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
    மம்தா பானர்ஜி பயணம் செய்த விமானம் மட்டுமன்றி, ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட் ஆகிய விமானங்களும் வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. அந்த விமானங்களும் குறைந்த அளவே எரிபொருள் இருந்ததாகத் தெரிவித்தன.
    இதில் சதிவேலை எதுவும் இல்லை. மம்தா பானர்ஜி சென்ற விமானம் 16 நிமிடங்களுக்குத்தான் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்தது. திரிணமூல் காங்கிரஸார் சொல்வதைப் போல 30 நிமிடங்களுக்கு அல்ல.
    விமானப் போக்குவரத்து விதிமுறைகளின்படி, ஒரு விமானம் தரையிறங்குவதற்கு முன்னர் 30 முதல் 40 நிமிடங்கள் வரை வானில் வட்டமடிக்கவும், அருகிலுள்ள விமான நிலையத்துக்குச் செல்லவும் தேவையான எரிபொருள் விமானத்தில் நிரப்பப்பட்டிருக்க வேண்டும்.
    இந்த விவகாரத்தில் அந்த விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் தண்டிக்கப்படுவர் என்று அவர்கள் தெரிவித்தனர்.
    இதற்கிடையே, மம்தா பானர்ஜி புதன்கிழமை இரவு பயணம் செய்த தங்களது விமானத்தில் போதிய அளவு எரிபொருள் இருந்ததாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad