Header Ads

  • BREAKING



    வெளிநாட்டு பயணங்கள்: எம்.பி.க்களுக்கு மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜன் கட்டுப்பாடு.

    அலுவல்பூர்வமாக வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடு திரும்பியதும் தங்களின் பயணம் தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கையை அளிக்க வேண்டும் என்று மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளார்.
    இந்தியாவில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நல்லெண்ணப் பயணமாக அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்வது வழக்கம். அந்நாட்டு நாடாளுமன்ற நடைமுறைகள், கலாசாரம், பரஸ்பர ஒத்துழைப்பு உள்ளிட்டவை பற்றி அறிய இதுபோன்ற பயணங்கள் உறுப்பினர்களுக்கு வாய்ப்பாக அமையும்.
    இந்நிலையில், பாஜகவைச் சேர்ந்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் இருவேறு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டபோது திட்டமிட்டபடி அலுவல்பூர்வ நிகழ்வில் பங்கேற்காமல் தவிர்த்து விட்டனர்.

    இரு மாதங்களுக்கு முன் நார்வே நாட்டுக்கு அரசுமுறைப் பயணமாக இந்திய எம்.பி.க்கள் குழு சென்றது. ஆனால், அங்கு அரசு நிகழ்வுகளில் பங்கேற்காமல் தவிர்த்த பாஜக உறுப்பினர், அச்சமயம் அந்நாட்டில் இருந்த முன்னாள் எம்.பி. ஒருவரை சந்தித்துப் பேசினார்.
    ஆஸ்திரேலியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு பாஜகவைச் சேர்ந்த மற்றொரு உறுப்பினர் அரசுமுறைப் பயணமாக சென்ற போது, அரசு நிகழ்வுகளில் பங்கேற்காமல் தனது நண்பர்களுடன் ஹோட்டல் அறையிலேயே இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த இரு உறுப்பினர்களின் நடவடிக்கையை மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனின் கவனத்துக்கு வெளியுறவுத் துறை கொண்டு சென்றது.
    இதைத் தொடர்ந்து, "எம்.பி.க்கள் வெளிநாடுகளுக்கு அலுவல்பூர்வ பயணம் மேற்கொண்டால், அவர்களின் பயணம் தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கையை தனக்கு உடனடியாக வழங்க வேண்டும்' என்று மக்களவைச் செயலகத்துக்கு சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டுள்ளார்.
    மேலும், வெளிநாட்டுப் பயணங்களின் போது சம்பந்தப்பட்ட குழுவில் உள்ள உறுப்பினர்கள் அரசு நிகழ்ச்சிகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் தவிர்க்கும் உறுப்பினர்களின் பெயரை, அடுத்தமுறை வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும் போது, மக்களவைச் செயலகம் கவனத்தில் கொள்ளாது தவிர்க்கலாம் என்றும் சுமித்ரா மகாஜன் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad