Header Ads

  • BREAKING



    மாநில அரசுக்குத் தெரிவிக்காமல் மேற்கு வங்கத்தில் ராணுவம் குவிப்பு: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு.

    மேற்கு வங்கத்தில் உள்ள 2 சோதனைச் சாவடிகளில் மாநில அரசுக்குத் தெரிவிக்காலமாலேயே ராணுவத்தை மத்திய அரசு குவித்திருப்பதாக திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், அந்த மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
    அந்த மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பல்சித், டன்குனி என்ற இரு இடங்களில் உள்ள சோதனைச் சாவடிகளில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். இதுதொடர்பாக, கொல்கத்தா தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை மேலும் கூறியதாவது:
    மாநில அரசுக்குத் தெரிவிக்காமலேயே 2 சோதனைச் சாவடிகளில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இது, அவசர நிலையைக் காட்டிலும் மோசமான நிலைமையாகும். இது, கூட்டாட்சி அமைப்பின் மீது தொடுக்கப்பட்ட ஒரு தாக்குதலாகும். இதுதொடர்பாக, மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு தலைமைச் செயலர் கடிதம் எழுதியிருக்கிறார். 
    வாய்ப்பு கிடைத்தால், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து, இந்த விவகாரத்தை அவரிடம் தெரிவிப்பேன்.
    ராணுவம் நமது சொத்து, அவர்களின் பங்களிப்பைக் கண்டு பெருமைப்படுகிறேன். மிகப்பெரிய அளவில் பேரிடர் ஏற்படும் நேரத்திலும், வகுப்புவாதப் பிரச்னைகள் ஏற்படும் நேரத்திலும் ராணுவ உதவியை நாடுகிறோம். ஆனால், இந்த நேரத்தில் ராணுவத்தை குவிக்கும் அளவுக்கு என்ன நடந்துவிட்டது என்று எனக்குத் தெரியவில்லை.
    ஒருவேளை ஒத்திகைப் பயிற்சியாக இருந்தாலும், மாநில அரசுக்குத் தெரிவித்திருக்க வேண்டும். சோதனைச் சாவடிகளில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டிருப்பதால், பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர் என்றார் அவர்.
    இதனிடையே, மக்கள் பீதியடையும் அளவுக்கு எதுவும் நடக்கவில்லை என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார். ஒரு குறிப்பிட்ட பகுதி வழியாகக் கடந்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுப்பதற்காக நடத்தப்படும் வழக்கமான பயிற்சிதான் இதுவென்றும் அவர் கூறினார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad