கட்கரி மகள் திருமண செலவு: பகிரங்கப்படுத்த காங்கிரஸ் வலியுறுத்தல்.
மகளின் ஆடம்பரத் திருமணத்துக்காக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எவ்வளவு செலவு செய்தார்? அந்தப் பணத்தை எவ்வாறு ஈட்டினார்? என்பன குறித்த தகவல்களை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
நிதின் கட்கரியின் மகள் திருமணம் மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்காக 50 விமானங்களின் இருக்கைகள் முழுவதையும் அவர் முன்பதிவு செய்ததாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கெüரவ் கோகோய், ஊடகங்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
பணத் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருமணத்துக்காக ரூ.2.5 லட்சம் வரை மட்டுமே எடுக்க வேண்டும் என்று சாமானிய மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால், நிதின் கட்கரி இல்லத் திருமண விழா எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இன்றி மிக ஆடம்பரமாக நடைபெற்றது.
மகளின் திருமணத்துக்காக எவ்வளவு செலவு செய்யப்பட்டது? அந்தத் தொகை எங்கிருந்து கிடைத்தது? என்பன தொடர்பான தகவல்களை நிதின் கட்கரி பகிரங்கப்படுத்த வேண்டும் என்றார் அவர்.
கருத்துகள் இல்லை