Header Ads

  • BREAKING



    உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர்.

    உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக, நீதிபதி ஜே.எஸ்.கேஹர் அடுத்த மாதம் பதவியேற்க உள்ளார்.
    இப்பொறுப்புக்கு மூத்த நீதிபதியான அவரது பெயரைப் பரிந்துரைத்து தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், மத்திய அரசுக்கு செவ்வாய்க்கிழமை கடிதம் அனுப்பினார். அதை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
    அதன்படி, தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கேஹருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அடுத்த ஆண்டு (2017) ஜனவரி 4-ஆம் தேதி பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். உச்ச நீதிமன்றத்தின் 44-ஆவது தலைமை நீதிபதியாகப் அவர் பொறுப்பேற்பார்.
    சீக்கிய சமூகத்தில் இருந்து வரும் முதல் தலைமை நீதிபதியாக கேஹர் இருப்பார்.

    அவர் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை (ஏழு மாதங்களுக்கு) அப்பதவியில் நீடிப்பார். அதன் பிறகு ஓய்வுபெறுவார். 
    நீதிபதி கேஹர் தற்போது தேசிய நீதித்துறை நியமன ஆணைய விவகாரத்தை விசாரித்து வரும் அமர்வுக்குத் தலைமை தாங்குவதோடு, அருணாசலப் பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி பிறப்பிக்கப்பட்டதை ரத்து செய்த அமர்வுக்கும் தலைமை தாங்கியிருந்தார்.
    மேலும், சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராயை சிறைக்கு அனுப்பும் உத்தரவைப் பிறப்பித்த அமர்வில் அவர் இடம்பெற்றிருந்தார்.
    நீதிபதிகள் நியமன விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கும் நீதித்துறைக்கும் மோதல் தீவிரமாகியுள்ள நிலையில், அண்மையில் தில்லியில் நடைபெற்ற அரசியல்சாசன தின விழாவில் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகியின் கருத்துக்கு நீதிபதி கேஹர் பதிலடி கொடுத்தார்.
    முன்னதாக, பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற அவர், கடந்த 1979-இல் வழக்குரைஞராகப் பதிவு செய்து கொண்டார். பஞ்சாபில் அரசு கூடுதல் வழக்குரைஞராக 1992-இல் நியமிக்கப்பட்டார். பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக 1999-இல் பதவியேற்றார்.
    அதன் பின் உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றத்தின் தாற்காலிக தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 2010-இல் பதவியேற்ற கேஹர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக 2011-இல் நியமிக்கப்பட்டார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad