Header Ads

  • BREAKING



    ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு : கைது செய்யப்பட்ட தியாகியை சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதி.

    புதுடெல்லி: விவிஐபி ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கைதான விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி உள்ளிட்ட 3 பேரை 4 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. விவிஐபிக்களுக்கான 12 ஹெலிகாப்டர்கள் ரூ.3,600 கோடியில் வாங்க இங்கிலாந்தின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் 2010ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்தது தொடர்பாக, 2013ம் ஆண்டு சிபிஐ விசாரணையை தொடங்கியது.

    விசாரணையில், விமானப்படையின் முன்னாள் தலைமை தளபதியான 71 வயதாகும் எஸ்.பி.தியாகி ரூ.423 கோடி கமிஷன் பெற்றது தெரியவந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள் 3 ஆண்டு விசாரணைக்கு பிறகு நேற்று முன்தினம் தியாகியை கைது செய்தனர்.

    அவருக்கு உதவிய உறவினர் சஞ்சீவ் தியாகி, வக்கீல் கவுதம் கேதான் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட தியாகி உள்ளிட்ட 3 பேரும் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த சம்பவத்தில் மிகப்பெரிய சதி நடந்திருப்பதால், தியாகியை 10 நாள் காவலில் விசாரிக்க சிபிஐ தரப்பில் அனுமதி கோரப்பட்டது. 

    தியாகி தரப்பில் ஆஜரான வக்கீல் ஹரிஹரன், ''ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் தியாகி மட்டும் தனிப்பட்டு எந்த முடிவும் எடுக்கவில்லை. பிரதமர் அலுவலகமும் இதில் சம்மந்தப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர்கள் பறக்கும் உயரத்துக்கான விதியை மாற்றும்படி பிரதமர் அலுவலகம்தான் யோசனை கூறியது. எனவே இந்த ஒப்பந்தம் கூட்டு முடிவாகும்'' என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தியாகி உள்ளிட்ட 3 பேரையும் டிசம்பர் 14ம் தேதி வரை சிபிஐ காவலில் விசாரிக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களை சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கள் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். இதற்கிடையே, முன்னாள் தளபதி தியாகி கைது செய்யப்பட்டது துரதிஷ்டவசமானது என தற்போதைய விமானப்படை தலைமை தளபதி அரூப் ராஹா கூறி உள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad