Header Ads

  • BREAKING



    இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையே 14 ஒப்பந்தங்கள் கையெழுத்து.

    இந்தியா - ஐக்கிய அரபு அமீரக நாடுகள் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு, வர்த்தக மேம்பாடு உள்ளிட்டவை தொடர்பாக 14 முக்கிய ஒப்பந்தங்கள் புதன்கிழமை கையெழுத்தாகின.
    அபுதாபி நாட்டு இளவரசர் ஷேக் முகமது பின் சையது, அரசு முறைப் பயணமாக செவ்வாய்க்கிழமை இந்தியா வந்தார். தில்லியில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் அவர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க உள்ளார்.
    இந்நிலையில், பிரதமர் மோடியை ஷேக் முகமது பின் சையது தில்லியில் புதன்கிழமை சந்தித்துப் பேசினார். மேற்கு ஆசியா மற்றும் வளைகுடா நாடுகளின் நலன் குறித்தும் பாதுகாப்பு நிலவரம், ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான நல்லுறவை மேம்படுத்துவது என பல முக்கிய விஷயங்களை இந்தச் சந்திப்பின்போது மோடியும், முகமது பின் சையதும் விவாதித்தனர்.

    இதைத்தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே 14 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ராணுவத் தளவாட உற்பத்தியில் ஒத்துழைப்பு, பாதுகாப்புத் துறையில் பரஸ்பர நல்லுறவு. வர்த்தக மேம்பாடு ஆகியவை அவற்றில் முக்கியமான ஒப்பந்தங்களாகும்.
    மேலும், பயங்கரவாத ஒழிப்பு, ஒருங்கிணைந்த பொருளாதார நடவடிக்கைகள், கடல்வழி போக்குவரத்தில் இணைந்து செயல்படுதல், சாலைப் போக்குவரத்துத் துறையில் நவீன தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளுதல், ஆள்கடத்தல் போன்ற குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை அளித்தல் உள்ளிட்டவை தொடர்பான ஒப்பந்தங்களும் இரு நாட்டுத் தலைவர்களின் முன்னிலையில் கையெழுத்தாகின.
    இதைத்தொடர்ந்து இரு தலைவர்களும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:
    இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது. இரு தரப்புக்கும் இடையே புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், பல்வேறு துறைகளின் கீழ் இருந்து வந்த ஒத்துழைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
    இதன் மூலம் இந்தியாவுக்கும், ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவு புதிய கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்திய உள்கட்டமைப்புத் துறையில் அந்நாடுகள் முதலீடு செய்ய முன்வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியாவின் மிக முக்கியமான தோழமை நாடாகவும், கூட்டாளியாகவும் ஐக்கிய அரபு அமீரகம் விளங்குகிறது என்றார் அவர்.
    முன்னதாக, இந்தியாவில் உள்கட்டமைப்புத் துறையில் 7,500 கோடி அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ.5.1 லட்சம் கோடி) ஐக்கிய அரபு அமீரக நாடுகள் முதலீடு செய்ய உள்ளதாகவும், அதுதொடர்பான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அத்தகைய ஒப்பந்தம் எதுவும் புதன்கிழமை கையெழுத்தாகவில்லை.
    அதற்கு இறுதி வடிவம் தருவற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால், அந்த ஒப்பந்தம் தற்போது மேற்கொள்ளப்படவில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் விளக்கமளித்துள்ளன.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad