Header Ads

  • BREAKING



    காஷ்மீர்: பனிச்சரிவில் சிக்கி பலியான ராணுவத்தினரின் எண்ணிக்கை 20-ஆக உயர்வு.

    காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பலியான ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளது.
    காஷ்மீரின் பந்திபோரா மாவட்டம், குரேஸ் பகுதியில் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு அருகே புதன்கிழமை நள்ளிரவு பனிச்சரிவு ஏற்பட்டது. இந்தப் பனிச்சரிவில் அங்குள்ள ராணுவ முகாம் அடித்துச் செல்லப்பட்டது.
    இதில், முகாமுக்குள் இருந்த ஏராளமான ராணுவ வீரர்கள் பனியில் புதையுண்டனர். இதையடுத்து, அங்கு வந்த மீட்புக் குழுவினர் பனியில் புதைந்திருந்த 7 வீரர்களை உயிருடன் மீட்டனர்.
    இதேபோல், குரேஸ் பகுதியில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட மற்றொரு பனிச்சரிவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் சிக்கிக் கொண்டனர்.

    தகவலறிந்த தீயணைப்புப் படையினர் அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் 10 வீரர்களின் உடல்களை மீட்டனர். 
    இந்நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு அங்கிருந்து மேலும் 10 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் பலியான ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளது.
    மேலும், சில வீரர்கள் பனியில் புதைந்திருக்கலாம் எனக் கூறப்படுவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

    தஞ்சை ராணுவ வீரர் பலி

    இறந்த வீரர்களில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் ஒருவரும் உயிரிழந்தது, வெள்ளிக்கிழமை தெரிய வந்தது.
    தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள கண்ணந்தங்குடி கீழையூரைச் சேர்ந்த ராணுவ வீரர் பி. இளவரசன் (27) உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக, இளவரசனின் பெற்றோர் பூமிநாதன் - அமுதாவுக்கு ராணுவ அலுவலர்கள் தகவல் தெரிவித்தனர். இருவரும் கூலித் தொழிலாளர்கள். இளவரசனுக்கு சுதா (32) என்ற அக்காவும், வினோத்குமார் (23) என்ற தம்பியும் உள்ளனர். பி.ஏ. பட்டதாரியான இளவரசன், கடந்த 2012ஆம் ஆண்டில் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். 51 ராஷ்ட்ரிய ரைபிள் குழுவில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றி வந்தார். இளவரசன் உயிரிழந்ததைக் கேள்விப்பட்ட இளவரசனின் குடும்பத்தினர் மட்டுமல்லாமல், உறவினர்கள், கிராம மக்கள் என அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    இதுகுறித்து பூமிநாதன் தெரிவித்தது: நாட்டுக்காக எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்தபோது பனிச்சரிவில் சிக்கி இளவரசன் உயிரிழந்ததாக அங்குள்ள ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். அடுத்த வாரம் ஊருக்கு வருவதாக இளவரசன் கூறி இருந்த நிலையில், அவர் இறந்த தகவலை கேட்டு குடும்பமே அதிர்ச்சி அடைந்துள்ளது. எனது மகனின் உடலை விரைவில் எங்களிடம் ஒப்படைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
    மதுரை வீரரும் பலி

    காஷ்மீர் பனிச்சரிவில், மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த ராணுவ வீரரும் உயிரிழந்துள்ளார்.
    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள பல்லக்காப்பட்டியைச் சேர்ந்த சின்னச்சாமி மகன் சுந்தர பாண்டியன் (27). கடந்த 2010-ஆம் ஆண்டில் ராணுவத்தில் சேர்ந்தார். தற்போது காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மனைவி சுகப்பிரியா, தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.
    கடந்த 25-ஆம் தேதி மாலை தனது குடும்பத்தினரிடம் பேசிய சுந்தர பாண்டியன், முகாம் பகுதியில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதாகவும், அவ்வப்போது பனிச்சரிவு ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
    மேலும், பனிப்பொழிவு குறைந்தவுடன் தொடர்பு கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
    இந்நிலையில், ராணுவத் தலைமையகத்தில் இருந்து சுந்தர பாண்டியன் குடும்பத்தினரை வெள்ளிக்கிழமை தொடர்பு கொண்ட அதிகாரிகள் பனிச்சரிவில் சிக்கி சுந்தர பாண்டியன் இறந்தது தொடர்பாகத் தெரிவித்துள்ளனர். அவரது சடலத்தை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளதாகவும், சடலம் மீட்கப்பட்டவுடன் ஊருக்கு கொண்டு வரப்படும் எனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad