Header Ads

  • சற்று முன்



    சென்னை பல்லாவரத்தில் ரூ 2 கோடி கேட்டு கடத்தப்பட்ட தொழில் அதிபரின் உறவினர் கொலை.

    சென்னை பல்லாவரம் அருகே, நாகல்கேணியில் இரும்பு பொருட்கள் விற்பனையகம் நடத்தி வரும் அபு சாலி வியாழக்கிழமை காலை வழக்கம்போல் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, முகமூடி அணிந்தபடி கடைக்குள் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல், அங்கு இருந்த சிசிடிவி காமிராக்களை உடைத்து விட்டு அபுசாலியை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிச்சென்று விட்டது.

    உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அபுசாலியின் சடலத்தை கண்டு கதறி அழுதனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் அபுசாலியின் சடலத்தை மீட்டு எடுத்துச்சென்றனர்.

    இந்த கொலைக்கு பின்னணியில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பிரபல ரவுடி பாளை ரபீக் என்பவன் இருப்பது காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    கடந்த 18 ந்தேதி இரும்பு வியாபாரம் செய்துவரும் தொழில் அதிபர் முகமது அலி என்பவரை பாளை ரபீக் தலைமையிலான கும்பல் கத்தியை காட்டி மிரட்டி காருடன் கடத்திச்சென்றது. வளசரவாக்கம் பகுதியில் குடோனில் அடைத்து வைத்து முகமது அலியின் ஆடைகளை களைந்து அடித்து உதைத்தது. அவரை விடுவிக்க 2 கோடி ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்த நிலையில் அவரது மனைவி 10 லட்சம் ரூபாய் ரொக்கபணமும் 2 லட்சம் ரூபாய்க்கு காசோலையும் கொடுத்து அவரை மீட்டு வந்தார்.

    இந்த கடத்தல் சம்பவம் குறித்து காவல்துறையில் சொன்னால் தீர்த்து கட்டிவிடுவேன் என்று ரபீக் மிரட்டியதால் அவர் புகார் கொடுக்க அஞ்சினார். ஆனால் முகமது அலியின் அண்ணன் மகனான அபுசாலி அதிமுகவில் நகர சிறுபான்மை பிரிவு பொருளாளராக இருப்பதால் காவல்துறையில் ரபீக்கிற்கு எதிராக தைரியமாக புகார் அளித்தார்.

    இதையடுத்து ரபீக்கையும் அவருடன் மேலும் இரு கூட்டாளிகளையும் காவல்துறையினர் கைது செய்தனர்.(( 22 ஆண்டுகளுக்கு பின்னர் ரபீக் போலீசில் சிக்கி கொள்ள அபுசாலியின் புகார் தான் காரணம் என்பதால் இந்த கொலைசம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.))

    கடந்த 1991-ம் ஆண்டு ரபீக்கின் மாமனார் ஜிந்தா கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு பழிக்கு பழியாக 1992ல் கவுஸ் என்பவரையும், 1994-ம் ஆண்டு சேக் அலி என்பவரையும் தலையை துண்டித்து கொலை செய்தது பாளை ரபீக் கும்பல்..! தலையை புழல் அருகே வீசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்..!

    ஜெயிலில் இருந்து வெளியில் வந்த பின்னர் சென்னை அண்ணா நகரில் தங்கியிருந்த பாளை ரபீக் கிண்டி மற்றும் சென்னையில் இரும்பு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த பல்வேறு தொழில் அதிபர்களை பல ஆண்டுகாலமாக மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்துவந்ததாக கூறப்படுகிறது.

    ரபீக்கின் மிரட்டலுக்கு பயந்து அவருக்கு மாமூல் பணம் கொடுத்துவந்த தொழில் அதிபர்கள், வியாபாரிகள் இதுவரை போலீசில் புகார் ஏதும் செய்யவில்லை.
    இந்நிலையில் தான் முகமது அலியை கடத்திய வழக்கில் அபுசாலி அளித்த புகாரில் போலீசில் சிக்கி உள்ளான் ரபீக். எனவே தான் சிறையில் அடைக்கப்பட அபுசாலி அளித்த புகார் தான் காரணம் என்ற ஆத்திரத்தில் பாளை ரபீக் கும்பல் அவரை தீர்த்து கட்டியிருக்கலாம் என்று சந்தேகிக்கிறது காவல்துறை.

    அபுசாலியின் கடையில் சிசிடிவி காமிராக்கள் பொருத்த பட்டிருப்பதால் முகம் தெரிந்து விடக்கூடாது என்று கொலையாளிகள் முகமூடி அணிந்து சென்றதாகவும் காமிராக்களை உடைத்து கொலை செய்துவிட்டு தப்பியதாகவும் சுட்டிக்காட்டுகிறது காவல்துறை..!

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad