Header Ads

  • BREAKING



    ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிரான மனுக்கள் ஜன. 30-இல் விசாரணை.

    ஜல்லிக்கட்டு போட்டிகளை தடையின்றி நடத்தும் வகையில், தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டம், மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றிய சட்ட மசோதா ஆகியவற்றுக்கு எதிராக விலங்குகள் நல வாரிய உறுப்பினர்கள், பிராணிகள் நல வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் தாக்கல் செய்துள்ள மனுக்களை வரும் 30-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பரிசீலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இது தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர். பானுமதி அமர்வு முன் விலங்குகள் நல வாரிய உறுப்பினர் என்.ஜி.ஜெயசிம்மா, இணை உறுப்பினர் கௌரி ஆகியோர் தனிப்பட்ட முறையிலும், "பீட்டா' உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, ஆனந்த் குரோவர் ஆகியோரும் புதன்கிழமை ஆஜராகினர்.

    "ஜல்லிக்கட்டுப் போட்டிகளை அனுமதிக்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டம், மாநில சட்டப்பேரையில் நிறைவேற்றியுள்ள சட்டத்திருத்தம் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்துள்ள உத்தரவை மீறும் வகையில் உள்ளது. இது தொடர்பான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவற்றை விசாரணைக்கு ஏற்க வேண்டும்' என்று வழக்குரைஞர்கள் கேட்டுக் கொண்டனர்.
    இதையடுத்து நீதிபதி தீபக் மிஸ்ரா, "ஜல்லிக்கட்டு வழக்கை நானும் நீதிபதி ஃபாலி நாரிமனும் விசாரித்தோம். இதே விவகாரம் தொடர்பாக மத்திய அரசும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவை நானும் நீதிபதி ஃபாலி நாரிமனும் அடங்கிய அமர்வு விசாரிக்கும்போது உங்கள் மனுக்களையும் பரிசீலிக்கிறோம். இயன்றவரை திங்கள்கிழமை (ஜனவரி 30) விசாரிக்கப் பார்க்கிறோம்' என்றார்.
    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் இதுவரை 70-க்கும் மேற்பட்ட "கேவியட்' மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இந்த விவகாரம் மீண்டும் சூடிபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad