Header Ads

  • BREAKING



    நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை: பாபநாசம் அணை நீர்மட்டம் 3 அடி உயர்வு.

    திருநெல்வேலி: நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து வெள்ளிக்கிழமை 37.50 அடியாக உள்ளது.

    வடகிழக்குப் பருவத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் எதிர்பார்த்தவாறு மழை பெய்யாததால் அணைகளின் நீர்மட்டம் உயரவில்லை. 2015 இல் வழக்கத்தை விட கூடுதலாக பெய்த மழையால் 11 அணைகளும் நிரம்பி, உபரிநீர் தாமிரவருணி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    2016 இல் இயல்பான அளவை விட கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் 62.19 சதவீதம் மழை குறைவாக பெய்ததால் அணைகளின் நீர்இருப்பு வெகுவாக குறைந்த காரணத்தால் பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறக்கவில்லை.

    இவ்விரு மாவட்டத்தில் குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. 

    தற்போதைய நீர் இருப்பை கொண்டு மே மாத வரை குடிநீருக்கு தண்ணீர் வழங்க முடியாது என்ற நிலையில் கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையால் பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    வெள்ளிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை (மில்லி மீட்டரில்): பாபநாசம் அணை-24, பாபநாசம் கீழ் அணை-18, சேர்வலாறு அணை-19, மணிமுத்தாறு அணை-4.8, ராமநதி அணை-5, கன்னடியன் அணைக்கட்டு-8,

    திருநெல்வேலி-5, பாளையங்கோட்டை-7, களக்காடு-21.2, சேரன்மகாதேவி-19.4, அம்பாசமுத்திரம்-6.6, ஆலங்குளம்-2.4, சங்கரன்கோவில்-2, சிவகிரி-2, தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர்-4, விளாத்திகுளம்-5.2, வைப்பாறு-2, ஓட்டப்பிடாரம்-2, கீழரசடி-1.

    பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 800 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 37.50 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 204.5 கனஅடி திறந்து விடப்பட்டுள்ளது.

    மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 83 கனஅடி, கடனாநதி அணைக்கு விநாடிக்கு 20 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. கடனாநதி அணையில் இருந்து 8 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 68.60 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 35.82 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 53 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 36.75 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 44.92 அடி, குண்டாறு அணையின் நீர்மட்டம் 21.75 அடி,

    அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 65 அடி, வடக்குப்பச்சையாறு அணையின் நீர்மட்டம் 3.25 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம் 9.21 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 13 அடியாகவும் உள்ளது. பெட்டிச் செய்தி: 11 அணைகளின் 

    நீர்இருப்பு 7.5 சதம் 

    2016 இல் ஜனவரி மாதத்தில் இம்மாவட்டத்திலுள்ள 11 அணைகளும் நிரம்பிய இருந்தன. தற்போது அணைகளின் நீர்இருப்பு 7.5 சதவீதமாக உள்ளது. இது முந்தைய ஆண்டை விட 88 சதவீதம் குறைவாகும். இப்பாசனத்திலுள்ள 2518 குளங்களும் நீரின்றி வறண்டுள்ளன. குளங்கள் வறண்டதால் நிலத்தடி நீர் ஆதாரமும் பாதிக்கப்பட்டு, பெரும்பாலான கிணறுகள் வறண்டன. ஒரு சில வட்டாரங்களில் சில கிணறுகளில் மட்டும் ஒன்று முதல் 3 மணி நேரம் வரை பாசனம் மேற்கொள்ளும் அளவுக்கு மட்டுமே நீர் இருப்பு உள்ளது.

    சாகுபடி குறைவு: 

    இம்மாவட்டத்தில் 2016 இல் 83,300 ஹெக்டேரில் நெல் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் கார் பருவத்தில் 17,723 ஹெக்டேரும், பிசான பருவத்தில் 10,474 ஹெக்டேருóம் நெல் நடவு செய்யப்பட்டது. 

    கார் பருவத்தில் சாகுபடி செய்ததில் நீரின்றி 5 ஆயிரம் ஹெக்டேரில் நெற்பயிர்கள் கருகின. நிகழ் பிசான பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெற்பயிரை காப்பாற்ற மார்ச் மாதம் இறுதி வரை தண்ணீர் தேவை என்ற நிலையில் பயிர்கள் கருகும் அபாயம் இருப்பதாக கருதப்படுகிறது.

    இது தவிர 14,600 ஹெக்டேரில் சிறுதானியங்கள், 33,444 ஹெக்டேரில் பயிறு வகைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த பயிர்களுக்கும் பாசன நீர் வழங்க முடியாத சூழல் உள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad