மதுரை அலங்காநல்லூரில் 4ஆவது நாளாக தொடரும் போராட்டம்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மதுரை அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் போராட்டம் 4ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கான தடையை விலக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக நல அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வந்தன.
இந்த நிலையில், ஜல்லிக்கட்டுக்கான தடையை விலக்க வேண்டும், பீட்டா அமைப்பைத் தடை செய்ய வேண்டும், ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கடந்த ஜன. 13-ஆம் தேதி முதல் தமிழகத்தின் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை அலங்காநல்லூரில் கடந்த 16ம் தேதி முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது. தொடர் போராட்டத்தால் மதுரை, வாடிப்பட்டி, சோழவந்தான் பகுதிகளில் இருந்து அலங்காநல்லூருக்கு அரசுப் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படவில்லை. இதனால் மூன்றாவது நாளாக புதன்கிழமையும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நான்காவது நாளாக இன்றும் போராட்டம் தொடர்வதால் அலங்காநல்லூரில் பதற்றம் நீடிக்கிறது.
ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து அரசு உறுதியான பதிலை அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை