Header Ads

  • BREAKING



    தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் ரூ.83 கோடி ரொக்கம் பறிமுதல்.

    அடுத்த மாதம் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில், இதுவரை ரூ.83 கோடி ரொக்கப் பணத்தை தேர்தல் கண்காணிப்புக் குழு பறிமுதல் செய்துள்ளது.
    இதில், அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் மட்டும் ரூ.79.13 கோடி (பழைய நோட்டுகள் ரூ.31.65 லட்சம்) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
    அதற்கு அடுத்தபடியாக, பஞ்சாபில் ரூ.4.05 கோடியும், உத்தரகண்டில் ரூ.33.27 லட்சமும், மணிப்பூரில் ரூ.6.95 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
    இதேபோல், ரூ.12.65 கோடி மதிப்புள்ள 7.36 லட்சம் லிட்டர் மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
    அவற்றில், அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் மட்டும் ரூ.10 கோடி மதிப்புள்ள 3.95 லட்சம் லிட்டர் மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    இதுதவிர, ரூ.10.30 கோடி மதிப்புள்ள 1,485 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
    இதில், பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் ரூ.9.60 கோடி மதிப்புள்ள 1,134 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
    ரூ.83 கோடி ரொக்கப் பணம், 7.36 லட்சம் லிட்டர் மதுபானம், 1,485 கிலோ போதைப்பொருள், இவை அனைத்தையும் தேர்தல் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து கடந்த 18-ஆம் தேதி வரை தேர்தல் ஆணையம் நியமித்துள்ள கண்காணிப்புக் குழுக்கள் பறிமுதல் செய்துள்ளதாக, அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரி ஒருவர் சனிக்கிழமை கூறினார்.
    உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டப் பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் 4-ஆம் தேதி தொடங்கி, பல கட்டங்களாக, மார்ச் மாதம் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
    இந்நிலையில், வாக்காளர்களுக்குப் பணம், மதுபானம், போதைப் பொருள், பரிசுப் பொருள்கள் ஆகியவற்றைக் கொடுத்து அவர்களின் வாக்குகளை அரசியல் கட்சியினர் பெறுவதைத் தடுப்பதற்காக, 200 கண்காணிப்புக் குழுக்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
    அந்தக் குழுக்கள், தேர்தல் நடைபெறவுள்ள ஐந்து மாநிலங்களிலும் ரொக்கப் பணம், மதுபானம் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்து வருகின்றன.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad