Header Ads

  • BREAKING



    தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு.

    தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்தை எதிர்த்து விலங்குகள் நல வாரியம் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் தாக்கல் செய்த மனுக்கள் திங்கட்கிழமையன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.

    தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் விலங்குகள் நல வாரியம், விலங்குகள் நல ஆர்வலர்கள், விலங்குகள் நல அமைப்பான கூபா சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. விலங்குகள் நல வாரியம் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி மற்றும் ஆனந்த் குரோவர் உள்ளிட்டோர் நீதிபதி தீபக் மிஸ்ரா முன் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் ரோனிங்டன் நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது. நேற்று முன்தினம் ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் சட்டத்தை தமிழக அரசு சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றியது.

    இதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து 2016 ஜனவரி 7-ம் தேதி வெளியிட்டிருந்த அறிவிக்கையை மத்திய அரசும் திரும்பப் பெறுவதாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. தமிழக அரசே ஜல்லிக்கட்டை நடத்த சட்டம் இயற்றி விட்டதால் மத்திய அரசின் அறிவிக்கைக்கு தேவை இல்லை என்பதால் அதை மத்திய அரசு திரும்பப் பெற மனுத்தாக்கல் செய்துள்ளது.

    இந்த மனுவை மத்திய அரசு திரும்பப் பெறும் நிலையில் இந்த மனுவை எதிர்த்து விலங்குகள் நல அமைப்பினர் போட்ட வழக்கும் இயல்பாகவே முடிவுக்கு வந்து விடும். இந்த நிலையில் விலங்குகள் நல அமைப்புகள் சார்பில் தாங்கள் வெறும் அறிவிக்கையை எதிர்த்து மட்டும் வழக்குத் தொடரவில்லை எனவும், விலங்குகள் துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வழக்குத் தொடர்ந்ததாகவும் கூறி மத்திய அரசு தனது அறிவிக்கையைத் திரும்பப் பெறுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இந்த மனுவும் திங்கட்கிழமையன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad