Header Ads

  • BREAKING



    வடகொரிய ஏவுகணையை சுட்டு வீழ்த்துவோம்: அமெரிக்கா எச்சரிக்கை.

    கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைக்குத் தயாராக இருப்பதாக வடகொரியா அறிவித்துள்ளது. ஏவுகணையை ஏவினால் அதை சுட்டு வீழ்த்தப் போவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

    கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை எந்த நேரத்திலும் நடத்தத் தயாராக இருப்பதாக வடகொரியா அறிவித்துள்ளது. அரசின் செய்தித் தொலைக்காட்சி மூலம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதிபர் கிம் ஜாங் உன் நிர்ணயிக்கும் இடத்தில் இருந்து ஏவுகணை சோதனை எந்த நேரத்திலும் நடைபெறும் என அதில் கூறப்பட்டிருக்கிறது. வடகொரியா, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை தயாரிக்க அமெரிக்காவும் அமெரிக்க அரசின் கொள்கைகளுமே காரணம் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.கடந்த 1ஆம் தேதி நாட்டு மக்களுக்காக புத்தாண்டு உரையாற்றிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தயாரிப்பு இறுதி கட்டத்தில் இருப்பதாக கூறியிருந்தார்.

    இந்நிலையில் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவினால் அதைச் சுட்டு வீழ்த்தப் போவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

    அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் கார்டர் பேட்டி ஒன்றில், இதனைத் தெரிவித்தார். வட கொரியாவின் அணு ஆயுதங்களும், ஏவுகணைகளும் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது எனக் கூறிய அவர், அவற்றை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

    வட கொரியாவின் ஏவுகணைகள் அமெரிக்காவை நோக்கியோ அல்லது அமெரிக்காவின் நட்பு நாடுகளை நோக்கியோ வந்தால் அவற்றைச் சுட்டு வீழ்த்தத் தயாராக இருப்பதாகவும் கூறினார். இதனிடையே வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என தென்கொரியா அரசும் எச்சரித்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad