Header Ads

 • BREAKING  வார நாட்களிலும் தொடர்கிறது... அமெரிக்கத் தமிழர்களின் ஜல்லிக்கட்டுப் போராட்டம்!

  வாஷிங்டன்(US): தமிழகத்தில் தன்னெழுச்சியுடன் அனைத்து ஊர்களிலும் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்களைப் போல் அமெரிக்காவிலும் பல நகரங்களில் வார நாட்களிலும் நடைபெற்று வருகிறது.
  ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை இந்தியத் தூதரக அலுவலகத்திலும் நடத்த கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டன.
  சிகாகோவில் ஒரே நாளில் திரண்ட 700 பேர்

  சிகாகோ மாநகரப் பகுதியில் புதன்கிழமை மாலை நடைபெற்ற ஜல்லிக்கட்டு ஆதரவு கூட்டத்தில் 700 பேருக்கும் மேலானோர் பங்கேற்றனர். முந்தய இரவு நண்பர்கள் கூடி வாட்ஸ் அப், ஃபேஸ்புக் குழு அமைத்து காலையில் அரங்கம் பதிவு செய்து மாலைக்குள் இத்தனை பேர் திரண்டுள்ளது மிகப் பெரிய எழுச்சியாகும்.
  அதுவும் வார மத்தியில் அலுவலக நாளில், வீட்டிற்குச் செல்லாமல் நேரடியாக அரங்கத்திற்கு வந்து உணர்ச்சிமிக்க முழக்கங்கள் எழுப்பியிருக்கிறார்கள். அமெரிக்கத் தமிழர்கள் வரலாற்றிலேயே மிகக் குறுகிய கால அவகாசத்தில் 700 பேர் ஒன்று திரண்டது மிகவும் ஆச்சரியமான ஒன்றாகும்.
  திங்கட்கிழமை சிகாகோ இந்திய தூதரகத்திற்கு பெருந்திரளாக சென்று கோரிக்கை மனு
  அளிக்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

  நியூஜெர்ஸி பொங்கலுடன் ஜல்லிக்கட்டு
  நியூ ஜெர்ஸியில் பொங்கல் கொண்டாடுவதற்காக குடும்பங்களாக ஒன்று திரண்ட 250க்கும் மேற்பட்டோர், ஜல்லிக்கட்டு ஆதரவுக் களமாக மாற்றி முழக்கமிட்டனர். ஆண்டு தோறும் பொங்கல் கொண்டாடுவதற்காக ஒன்று சேர்வோம். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு தடைக்காக தமிழகமே திரண்டு போராடும் நிலையில் எங்களுக்கு பொங்கல் கொண்டாடும் மன நிலை இல்லை.
  ஜல்லிக்கட்டு தடை ஏன் , அதன் பின்ணணி மற்றும் நாட்டு மாட்டினங்களின் அழிவு குறித்து விரிவாக விவாதித்தோம். அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கும் விவரித்தோம், இறுதியில் அனைவரும் ஒருமித்த குரலில் ஆதரவு முழக்கங்கள் எழுப்பினோம் என்று ஏற்பாட்டாளர்கள் கூறினார்கள்.
  விஸ்கான்ஸினில் இந்தியர்கள் ஆதரவு
  விஸ்கான்ஸின் மாநிலம் மில்வாக்கியில் நடைபெற்ற ஆதரவுப் போராட்டத்தில் தமிழர்களுடன், மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள், இந்திக்காரர்கள் என இந்தியாவின் பல்வேறு மொழியினரும் பங்கேற்றனர்.
  அவர்கள் அனைவரும் தத்தம் சொந்த மொழியிலே பேசினார்கள். இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கேட்பதற்கே சிலிர்ப்பாக இருந்தது.
  தமிழர்களுக்கு பிற மொழியினரும் ஆதரவு என்பது மகிழ்ச்சியான ஒன்றாகும்.
  செயிண்ட் லூயிஸ் பறையிசை முழக்கத்துடன்.
  செயிண்ட் லூயிஸ் நகரில் காந்தி மையத்தில் நானூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கூடி ஆதர்வு முழக்கங்கள் எழுப்பினர். மிசோரி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தலைவர் விஜய் மணிவேல் போராட்டத்தின் காரணத்தை விளக்கினார்.
  பின்னர் உள் அரங்கத்தில் பறையிசை முழக்கத்துடன் கூட்டம் ஆரம்பித்தது. அமெரிக்க பறையிசை அணியின் பொற்செழியன் ஜல்லிக்கட்டு தமிழர்களை ஒரே நேர்கோட்டில் இணைத்திருப்பதை சுட்டிக்காட்டி வரவேற்றார். விவசாயிகளின் வறுமைக்கும் வறட்சிக்கும் இந்த போராட்டம் விடிவு காலமாக அமைய வேண்டும் என்று குறிப்பிட்டார்.
  பொதுவாக எம் மனசு தங்கம் பாடல் பறையிசையுடன் ஒலிக்க கூட்டத்தில் மேலும் உணர்ச்சிப் பொங்க முழக்கமிட்டார்கள்.
  ஹூஸ்டன் இந்தியத் தூதரகத்தில் மனு
  வியாழக்கிழமை, ஹூஸ்டன் தமிழர்கள் ஒன்றிணைந்து இந்திய தூதரகத்தில் குழுமினார்கள். அங்குள்ள தூதரக அதிகாரி டாக்டர் அனுபம் ரே வாசலுக்கு வெளியே வந்து தமிழர்களிடம் ஜல்லிக்கட்டு மற்றும் தமிழர் பாரம்பரியம் பற்றி கேட்டறிந்தார்.
  அவரிடம் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மனு வழங்கினார்கள். மனுவைப் பெற்றுக்கொண்டவர், அரசுக்கு தெரியப்படுத்தி முடிந்தவற்றை செய்வதாகவும் உறுதியளித்துள்ளார்.
  தமிழர்களை மிகவும் கனிவோடு வரவேற்ற தூதரக அதிகாரி, அந்நிய மண்ணில் இத்தனை ஆர்வத்துடன் பாரம்பரியத்தைக் காக்க ஒன்று திரண்டு வருவது நெகிழ்ச்சியாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
  ஹூஸ்டன் தமிழர்கள் சார்பில் சனிக்கிழமை, ஜார்ஜ் புஷ் பூங்காவில் பெரிய அளவில் ஆதரவுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறாது.
  சான் அண்டோனியோ - மெம்ஃபிஸ் தமிழர்கள்
  டெக்சாஸ் சான் அண்டோனியா நகரில் புதன் கிழமை மாலை, தன்னார்வத்துடன் சுமார் 150 பேர் திரண்டு ஜல்லிக்கட்டு ஆதரவு தெரிவித்தனர். விவசாயத்தை காப்பாற்றுவோம், விவசாயிகளைக் காப்பாற்றுவோம் என்றும் முழக்கங்கள் எழுப்பினர்.
  டென்னசி மாநிலத்தின் மெம்ஃபிஸ் நகரில் தென் மத்திய தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி ஆதரவு தெரிவித்தனர். நூறு பேருக்கும் மேல் திரண்ட இந்த கூட்டத்தில் குடும்பங்களாக கலந்து கொண்டனர். குறைவான அளவிலேயே தமிழர்கள் வசிக்கும் மெம்ஃபிஸ் நகரில், குறுகிய கால அவகாசம் மற்றும் வேலை நாள் என்ற போதிலும் இத்தனை பேர் கூடியது குறிப்பிடத்தகதாகும்.
  டல்லாஸ் தொடர் போராட்டாங்கள்
  டல்லாஸ் மாநகரத்தில் நான்காவது நாளாக வியாழக்கிழமை தொடர் போராட்டம் நடைபெற்றது, கடந்த புதன்கிழமை இர்விங் காந்தி சிலை அருகில் குடும்பங்களாக கூடி ஆதரவு தெரிவித்தனர்.
  அடுத்து சனிக்கிழமை மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்க பொங்கல் விழாவிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு முழக்கங்கள் எழுப்பினர். புதன் கிழமை மீண்டும் இர்விங் காந்தி சிலை அருகில் நூறு பேர் கூடி தடையை உடைக்க கோரிக்கை விடுத்தனர்.
  தொடர்ந்து வியாழக்கிழமை, காந்தி சிலை அருகே மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. 250க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று மத்திய அரசு தலையிட்டு ஜல்லிக்கட்டு நடத்த ஆவண செய்யவேண்டும் என்று கோரிக்கை முழக்கங்கள் எழுப்பினர்.
  ஞாயிற்றுக்கிழமை டல்லாஸ் டவுண்டவுண் பகுதியில் மிகப்பெரிய மனிதச் சங்கிலிப்
  போராட்டத்திற்கு ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் தெரிவித்தனர்.

  ஃபீனிக்ஸில் அமெரிக்கர்கள் ஆதரவு
  மேற்கே அரிசோனா மாநிலத்தின் ஃபீனிக்ஸ் மாநகரப் பகுதியான ஸ்காட்ஸ்டேல் நகர டவுண்டவுண் பகுதியில் வியாழக்கிழமை 150 தமிழர்கள் திரண்டனர். அருகிலுள்ள கடை உரிமையாளர்களும் ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டு கேட்டறிந்தனர்.
  அந்த வழியாகச் சென்ற அமெரிக்கர்களிடம், ஜல்லிகட்டு என்றால் என்ன, அதன் வரலாறு, தமிழர்களின் பாரம்பரியம் போன்றவற்றை எடுத்துச் சொன்னார்கள் அரிசோனாவில் பூர்வீக அமெரிக்க இந்தியர்களின் எண்ணிக்கை அதிகமாகும். பூர்வீக மக்களின் உரிமைக்காக அரிசோனாவில் பல உரிமைப் போராட்டங்கள் நடந்துள்ளது. அங்கு தமிழர்களின் பாரம்பரியம் என்று எடுத்துச் சொன்னபோது, எளிதில் அவர்களால் உணர முடிந்தது,
  இன்று டொனால்ட் ட்ரம்ப் அதிபராக பதவியேற்பதை ஒட்டி, பெரும்பாலான ஊர்களில் வியாழக்கிழமையே ஆதரவுப் போராட்டங்களை நடத்திவிட்டனர் இன்னும் பல ஊர்களில் சனி,ஞாயிறு கிழமைகளில் ஆதரவுக் கூட்டங்களுக்கு ஏற்பாடுகள் நடைபெறுகிறது.
  திங்கட்கிழமை அனைத்து இந்திய தூதரகங்களிலும் முற்றுகையிட்டு கோரிக்கை மனு அளிக்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
  தமிழகத்தைப் போலவே, அமெரிக்கா முழுவதிலும் தன்னெழுச்சியாக, அமைப்பு ரீதியாக இல்லாமல் மக்களே கூடிப் பேசி உடனுக்குடன் கூட்டங்கள் நடத்தி தங்கள் இன உணர்வை வெளிக்காட்டி வருவது முக்கியமானதாகும்.
  அரிசோனா ஃபீனிக்ஸ்
  ஹூஸ்டன் தூதரகம் முன்பு
  டெக்சாஸ் இர்விங் மனிதச் சங்கிலி
  சான் அண்டோனியோ
  விஸ்கான்ஸின் மில்வாக்கியில் பன்மொழி இந்தியர்கள்

  கருத்துகள் இல்லை

  Post Bottom Ad