இன்ஸ்டாகிராம் மூலம் கஞ்சா சாக்லேட் விற்பனை: மருத்துவர் கைது.
சமூகவலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனை செய்த மருத்துவரை ஹைதராபாத் போலீசார் கைது செய்தனர்.
தெலங்கானா மாநிலம் ரச்சகொண்டா பகுதியைச் சேர்ந்த மருத்துவர் முகமது சுஜாத் அலி கான், விஸ்கி சாக்லேட்டுகளைப் போல கஞ்சா கலந்த சாக்லேட்டுகளை உருவாக்கி, அதனை சமூகவலைதளம் மூலம் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது மருத்துவமனையைச் சோதனையிட்ட போலீசார், கஞ்சா சாக்லேட்டுகளை மருத்துவர், சுஜாத் அலிகான் உருவாக்கி வருவதை உறுதி செய்தனர்.
இதுதொடர்பாக அவரிடம் நடத்திய விசாரணையில், கஞ்சா சாக்லேட்டுகளை கொரியர் மூலம் அனுப்புவதாகவும், பணத்தை இன்டர் பேங்கிங் மூலம் பெற்றுக் கொள்வதாகவும் மருத்துவர் சுஜாத் அலிகான் தெரிவித்தார். ஹைதராபாத் மட்டுமல்லாது பெங்களூரு, சென்னை, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் அவரிடம் சிலர் கொரியர் மூலம் கஞ்சா சாக்லேட்டுகளை வாங்கி வந்ததும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சாக்லேட்டுகளை விற்பனை செய்ய கான், தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் விளம்பரம் செய்வதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் அவரைக் கைது செய்தனர்.
கருத்துகள் இல்லை