அங்கீகாரம் இல்லாத நிலங்களை வீட்டுமனைகளாக பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு!
விளை நிலங்களை வீட்டுமனைகளாக பத்திரப் பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் கடந்த ஆண்டு, பொது நல மனு தாக்கல் செய்தார். தமிழகத்தின் விளை நிலங்கள் பல இடங்களில் அங்கீகாரமற்ற முறையிலும், விதிமுறைகளை மீறியும் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வருவதால் விளை நிலங்கள் குறைவதாகக் கூறியதோடு, குறிப்பிட்ட நிலங்களுக்கு பத்திரப்பதிவு செய்ய தடை கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், பத்திரப் பதிவுக்கு இடைக்காலத் தடை விதித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி உத்தரவிட்டனர். இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி தலைமையிலான முதன்மை அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வகைப்படுத்தப்பட்ட நிலங்களின் பட்டியலைத் தாக்கல் செய்ய தமிழக அரசு மேலும் கால அவகாசம் கோரியது. ரியல் எஸ்டேட் அதிபர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அரசு தொடர்ந்து கால தாமதம் செய்து வருவதாகவும் பட்டியலை விரைவாக தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் கூறியிருந்தனர். இந்தப் பிரச்சனையில் பொதுமக்களும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதில் பொதுமக்கள் பாதிப்பு இருப்பதை நீதிமன்றம் உணர்ந்தாலும், அரசு தான் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என கூறிய நீதிபதிகள் அமர்வு, வழக்கின் விசாரணையை பிப்ரவரி 27-ம் தேதிக்கு தள்ளி வைத்தது. அன்றைய தினம் நிலங்களின் வகைப்படுத்தப்பட்ட பட்டியலை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் அமர்வு, அதுவரை ஏற்கனவே விதிக்கப்பட்ட பத்திரப்பதிவுக்கான தடை உத்தரவு நீடிக்கும் எனவும் தெரிவித்தது.
கருத்துகள் இல்லை