Header Ads

  • BREAKING



    கணக்கில் காட்டாத சொத்துகளை மறைக்க முடியாது: வருமான வரித் துறை எச்சரிக்கை.

    கணக்கில் காட்டாத சொத்துகளை வைத்திருப்பவர்கள், அவற்றை மறைக்க முடியாது என்று வருமான வரித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
    இதுதொடர்பாக, முன்னணி தேசிய நாளிதழ்களில் வருமான வரித் துறை ஞாயிற்றுக்கிழமை விளம்பரம் கொடுத்துள்ளது.
    அந்த விளம்பரத்தில், ""உங்களது அறிவிக்கப்படாத சொத்துகள், கருப்புப் பணம் எங்களிடம் இருந்து மறைக்கப்படவில்லை''. ""உங்களுடைய அறிவிக்கப்படாத சொத்துகளை பிரதமரின் ஏழைகள் நலனுக்கான திட்டத்தில் முதலீடு செய்து, சமூக-பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்துங்கள்'' போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
    அந்த விளம்பரத்தில், மேலும் கூறப்பட்டுள்ளதாவது: 
    கணக்கில் காட்டப்படாத சொத்துகள் கண்டறியப்பட்டால், அவற்றுக்கு அபராதம், உபரி வரி உள்பட 77.25 சதவீத வரி விதிக்கப்படுவதுடன், சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படும்.

    எனவே, கணக்கில் காட்டப்படாத பணம் அல்லது சொத்துகளை வைத்திருப்பவர்கள், பிரதமரின் ஏழைகள் நலனுக்கான திட்டத்தில் (பிஎம்ஜிகேஒய்) முதலீடு செய்து, சட்டப்பூர்வ நடவடிக்கையில் இருந்து விலக்கு பெறலாம் என்று அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திரும்பப் பெற்ற பிறகு, கணக்கில் காட்டாத சொத்துகள் மற்றும் ரொக்கப் பணம் வைத்திருப்பவர்கள், அவற்றை தாமாக முன்வந்து அறிவிப்பதற்காக, பிஎம்ஜிகேஒய் திட்டத்தை கடந்த மாதம் 17-ஆம் தேதி அறிமுகம் செய்தது.
    அந்தத் திட்டத்தின்படி, கணக்கில் காட்டாத சொத்துகள் மற்றும் கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள், 50 சதவீத வரியைச் செலுத்தி, அவற்றை அருகில் உள்ள தபால் நிலையங்கள் அல்லது வங்கிகள் மூலமாக அறிவிக்கலாம்.
    அந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகையில் நான்கில் ஒரு பங்குக்கு நான்கு ஆண்டுகளுக்கு வட்டி வழங்கப்பட மாட்டாது. இந்த அவகாசம், வரும் மார்ச் 31-ஆம் தேதி வரை அளிக்கப்படுகிறது.
    இந்தத் திட்டத்தின் கீழ், இதுவரை ரூ.300 கோடி வரை முதலீடு கிடைத்திருப்பதாக வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad