Header Ads

 • BREAKING  முதல்வர் பெயரை டேமேஜ் செய்ய நடத்தப்பட்டதா தடியடி? யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது காவல்துறை?

  சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மீது போலீசார் திடீரென தடியடி நடத்திய சம்பவத்தை வைத்து பார்க்கும்போது காவல்துறை இப்போது யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்ற கேள்வி பொதுமக்களுக்கு ஏற்படுகிறது.

  உலகத்திற்கே எடுத்துக்காட்டும் வகையில், தமிழக மாணவர்களும், இளைஞர்களும் ஜல்லிக்கட்டு வேண்டி, அறவழியில் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

  நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் என இந்தியா முழுக்க உள்ள பிரபலங்களும் இந்த அறவழி போராட்டத்தை பாராட்டினர். இந்நிலையில் நேற்று காலை திடீரென மெரினா போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

  இதையடுத்து அலங்காநல்லூர், கோவை நகரங்களிலும் தடியடி நடத்தப்பட்டது. இதனால், தமிழகமே போர்க்களம் போல காட்சியளித்தது. இதனிடையே திடீரென, சென்னையில் பல வாகனங்கள், போலீஸ் நிலையங்களில் தாக்குதல் நடத்தப்பட்டன. தீக்கிரையாக்கப்பட்டன.

  விஷமிகள் மட்டுமின்றி, போலீசாரே தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டதற்கான வீடியோ ஆதாரங்கள் ஊடகங்களிலும், சமூக தளங்களிலும் சுற்றி திரிகின்றன. மாணவர்கள் போராட்டம் வெற்றிகரமாக முடியவடைய வேண்டிய நேரத்தில் அதை கொச்சைப்படுத்த இதுபோன்ற வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என சந்தேகம் எழுந்துள்ளது.

  இதில் முக்கியமாக ஒரு கேள்வி விடை காணப்படாமலேயே நிற்கிறது. இந்த கேள்வியை நடிகர் கமல்ஹாசன் மட்டுமின்றி, சென்னை ஹைகோர்ட்டே கேட்டுள்ளது. 'அமைதியாக போராடிக் கொண்டிருந்த மாணவர்கள் மீது ஏன் தடியடி நடத்தப்பட்டது' என்பதுதான் அந்த கேள்வி. இந்த கேள்வி எழும் என்று தெரிந்துதான், போலீசாரே வாகனங்களுக்கு தீ வைத்து, அந்த பழியை மாணவர்கள் மீது போட்டுவிட்டு அவர்களை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. ஏன் இந்த கோபம் போலீசாருக்கு? என்ற கேள்விக்கு விடை காணும் முன்பாக மற்றொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும்.

  சுமார் ஒரு வார காலம் மாணவர்கள் மெரினாவில் போராடி வந்த நிலையில், முதல் சில நாட்கள் மந்தமாக இருந்த தமிழக அரசு போராட்டத்தின் தீவிரத்தை பார்த்த பிறகு சுறுசுறுப்படைந்தது. முதல்வர் பன்னீர்செல்வமே நேரடியாக டெல்லி சென்று பிரதமர் மோடியிடம், ஜல்லிக்கட்டு சட்டத்தின் அவசியத்தை எடுத்துக்கூறினார். மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று மோடி கூறிய வாக்குறுதியை நம்பி, தமிழக அரசு அவசர சட்டத்தை இயற்றி, அதை ஒரே நாளில் மத்திய அரசின் 3 துறை அமைச்சகங்களிடம் ஒப்புதல் பெற்றதோடு, குடியரசு தலைவர், ஆளுநரிடமும் ஒப்புதல் பெற்றது.

  இப்படி அதிவேகமாக ஒரு மாநிலம் பெற்ற அவசர சட்ட ஒப்புதல், நாட்டிலேயே, இதுவாகத்தான் இருக்கும். எனவேதான் தனது இமேஜை உயர்த்திக்கொள்ள அலங்காநல்லூரில் தானே ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதாக கூறினார் பன்னீர்செல்வம். ஆனால் நிரந்தர சட்டம் வேண்டும் என்று போராட்ட களம் அடுத்த நகர்வுக்கு சென்றதாால் அவர் தோல்வி முகத்தோடு திரும்பினார். ஆனால் சட்டசபையில் திங்கள்கிழமையான நேற்றே சட்டத்தை நிறைவேற்ற உள்ளதாக அவர் உறுதியளித்தார்.

  இப்படி சட்டசபையில் சட்டம் நிறைவேறிவிட்டால், அதன்பிறகு போராட்டக்காரர்களுக்கு கோரிக்கையே மிஞ்சியிருக்காது. நேற்று அமைதியாக கலைந்திருப்பர். ஏன்.. வெற்றி விழா கொண்டாடியும் இருப்பர். இதனால் மாணவர்களுக்கு கண்டிப்பாக முதல்வர் பன்னீர்செல்வம் மீது ஒரு மரியாதை பிறந்திருக்கும். ஆனால் திடீர் தடியடி என்பது முதல்வரின் இமேஜை சரிவடைய செய்துள்ளதாகவே கருதுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

  இப்படி அரசியலில் ஸ்கோர் செய்ய வேண்டிய நேரத்தில், பன்னீர்செல்வம் எதற்காக காவல்துறையை ஏவியிருப்பார்? அதற்கான அவசியமே எழவில்லையே? அப்படி ஏவியிருந்தால் போராட்டம் தொடங்கியது முதலே அதை ஏவியிருக்கலாமே? அப்படியானால் போலீஸ் தடியடியால் பன்னீர்செல்வம் இமேஜ் சரிவடைந்தால் யாருக்கு லாபம்? மாணவர்கள் போராட்டத்தால் ஜல்லிக்கட்டு சட்டத்தை முதல்வர் முயற்சி எடுத்து நிறைவேற்றியுள்ளார். ஆனால், அதை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு போலீசாரின் லத்திகளும், கல் வீச்சுகளுமே நமது கண்முன் வந்து அச்சமூட்டுகிறதே. இதனால் பன்னீர்செல்வம் எடுத்த முயற்சி அத்தனையும் அவரது அரசியல் செல்வாக்குக்கு பயனற்று போனதை போன்ற தோற்றம் வருகிறதே. இந்த தோற்றம் உருவாவது யாருக்கு லாபம்?

  கண்டிப்பாக பன்னீர்செல்வம் இந்த தடியடியை விரும்பியிருக்க வாய்ப்பில்லை. தமிழக அரசியல் வரலாற்றிலேயே ஒரு முக்கியமான சட்டத்தை நிறைவேற்றி, மக்களிடம் நல்ல பெயர் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட பன்னீர்செல்வம் ஒன்றும், அரசியல் தெரியாத புதுமுகம் கிடையாது. அப்படியானால் அவருக்கு கிடைக்க வேண்டிய நற்பெயரை கெடுக்க நினைத்தவர்கள் யார்? விஷமிகள் கலவரம் நடத்தி, தீ வைத்திருந்தால்கூட லாஜிக் இடிக்காது. போலீசாரே தீ வைத்துள்ளதாக வெளியான வீடியோக்களை பார்க்கும்போது முதல்வருக்கு எதிராக ஏன் காவல்துறையே நடந்து கொண்டது என்ற கேள்வி எழுகிறது.

  அப்படியானால், காவல்துறை யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது? முதல்வருக்கு கெட்டபெயரை ஈட்டித்தர உள்ளேயே இருந்து கொண்டு, காவல்துறையை தப்பாக பயன்படுத்தியது யார்? என்ற இரு கேள்விகளும் சாமானியர்களுக்கும் எழுகிறது. இந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்க, உரிய விசாரணை நடத்த வேண்டிய அவசியம், அரசுக்கும், காவல்துறைக்கும் ஏற்பட்டுள்ளது.

  கருத்துகள் இல்லை

  Post Bottom Ad