Header Ads

 • BREAKING  மெரினாவில் மட்டுமல்ல தமிழகம் முழுக்கவே இன்று மாணவர்கள் அவமதிக்கப்பட்டதின் பின்ணணி!

  கடந்த 7 நாட்களாக ஜல்லிக்கட்டு தடை நீக்கக் கோரி மெரினாவில் மாணவர்கள் மற்றும் பெண்களின் அமைதிப் போராட்டம் உலகத் தமிழர்கள் அனைவரது பெருமிதத்தோடும், ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தை ஈர்த்தபடி மிக கெளரவமாக நடந்த வண்ணம் இருந்தது. ஆனால் இன்று காலை நடைபெற்ற அவமதிப்பு, இந்த தன்னெழுச்சிப் போராட்டத்தைப் பொருத்தவரை வெகுஜனக் கண்ணோட்டத்தில் அவசியமில்லாத ஒன்றாகவே கருதப் படுகிறது. ஆனால் இதற்கான அறிகுறிகளும், சமிஞ்சைகளும் நேற்று மாலை முதலே அங்கு அரங்கேறிக் கொண்டு தான் இருந்தன. நடிகர் லாரன்ஸ் சொன்னதைப் போல முதல் நான்கு நாட்கள் வரை மாணவர்களின் போராட்ட முறை வெகு கண்ணியமாகவே இருந்தது. ஆனால் அது மாணவர்களுக்கு மட்டுமே நற்பெயரைப் பெற்றுத் தருமே தவிர அதனால் நமக்கென்ன லாபம்?

  என சில விரும்பத்தகாத சக்திகள் நினைத்தனவோ என்னவோ? தொடர்ந்து கையில் சிக்கிய சிறு சிறு அட்டைகள் மற்றும் வெள்ளை சாட் பேப்பர்களிலும் கூட மிக மோசமான வாசகங்களை எழுதிக் கொண்டு வந்து அவற்றைக் கையில் உயர்த்திப் பிடித்தவாறு கும்பலில் நின்று கோஷமிடத் தொடங்கினர். சாம்பிளுக்கு சில வாசகங்களைப் பாருங்கள்;

  ' மோடி நீ இப்ப வந்தா டெட்பாடி'
  'என் மாடு, என் நாடு, நீ மூடு'
  'காணவில்லை ஓ.பன்னீர்செல்வம், குறிப்பு: மிக்ஸர் போதாது என்று சின்னம்மா அழுகிறார்'
  'பீட்டா, பீட்டா பிஞ்சு போகும் பேட்டா"
  - இதை விட மோசமாகவும் அங்கு கோஷமிட்டுக் கொண்டிருந்தனர். பெரும்பாலானவை நினைவில் நிற்காததால் இங்கு பதிவு செய்ய முடியவில்லை. ஆனால் ஒரு விசயம் அப்பட்டமாகத் தெரிந்தது. இப்படி கோஷமிட்டவர்கள் நிச்சயமாக உண்மையான மாணவப் போராட்டக்காரர்களாக இருக்க வாய்ப்பில்லை. மாணவர்கள் செய்யக்கூடிய வேலை அல்ல அது. ஒரு வேளை அவர்களும் மாணவர்கள் தான் எனில் அவர்களது போராட்ட முறை தவறு. அந்தத் தவறுகள் தான் இன்றைய அவமதிப்புக்கு தனிப் பெரும் காரணம். மற்றபடி அந்நிய நாட்டு குளிர்பானங்களைத் தடை செய்ய வேண்டும் எனவும், பீட்டாவைத் தடை செய்ய வேண்டும் எனவும் அவர்களது கோரிக்கைகள் நீண்டு கொண்டு போனது ஒரு பிரதான காரணமே இல்லை. மிகக் கண்ணியமான முறையில் போராடிக் கொண்டிருந்த மாணவர்களின் சக்தியைக் கண்டு அரசியல் கட்சிகள் ஒரு புறம் பாராட்டினாலும் மறுபுறம் மிரண்டு போனதும் உண்மையே! அதிலும் நேற்று முன் தினம் ஆர்.ஜே பாலாஜியின் மெரினா உரை ஊடகங்களில் பலமுறை பகிரப்பட்டு பலரிடம் தன்னம்பிக்கை வித்தை விதைத்துச் சென்றது. அவரது உரையிலிருந்து கொஞ்சம் இங்கே;

  "இனி ஒவ்வொரு பிரச்சினைக்காகவும் மக்கள் சாலையில் இறங்கி போராடத் துணிய வேண்டும். அப்போது தான் அரசியல் கட்சிகளுக்குப் பயம் இருக்கும். சட்டைப் பாக்கெட்டில் அரசியல் கட்சித் தலைவர்களின் புகைப்படங்கள் வெளியில் தெரியும்படி வைத்துக் கொண்டு ட்ராஃபிக் சிக்னலில் போக்குவரத்துச் சட்டத்தை மதிக்காமல் திமிராகச் செல்பவர்கள் இனி அஞ்ச வேண்டும்.

  இன்று அவசரச் சட்டம் நிறைவேற்றப்படு விட்டது, ஆனால் அதை நிறைவேற்றப் பாடுபட்டது நாம் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த 39 எம்.பிக்கள் அல்ல மாணவர்களாகிய நீங்கள் தான், இது வரை ஏதாவது அநீதி என்றால் முகத்தில் கர்ச்சீப் கட்டி மறைத்துக் கொண்டு போய் தான் நீதி கேட்டோம். ஆனால் இனி யாருக்கும் பயப்படத் தேவையில்லை. ஏப்ரலில் படிக்க காசு கேட்டு பள்ளிகள் நெருக்கினால் தைரியமாக நேரடியாக சாலையில் இறங்கிப் போராட வேண்டும். இங்கிருக்கும் மாணவர்கள் அனைவருமே இனி தலைவர்கள் தான். அவர்கள் யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கட்டும், நாம் ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைக்கலாம். கடந்த வருடம் சட்ட மன்றத் தேர்தலில் 57 சதவிகிதம் வாக்குகள் தான் பதிவானது. மீதி ஓட்டுக்கள் என்னவாயின? இப்போதிருக்கும் அரசியல்வாதிகளில் எவர் நம்மை இன்ஸ்பையர் செய்தார்கள்? யாருமில்லை. எத்தனை வருசமாக யாராவது ஒரு தலைவர் வர மாட்டாரா? என்று மக்கள் ஏங்கிப் போயிருந்தார்கள். இனி மக்களுக்கு சரியான தலைவர்கள் கிடைப்பார்கள் என்று ஆர்.ஜே பாலாஜியின் பேச்சு அதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் அத்தனை பேர் மனதிலும் உணர்வுப் பூர்வமான வகையில் புது நம்பிக்கை தருவதாக இருந்தது.

  இப்படியான நம்பிக்கைகள் மக்கள் மனதில் விதைக்கப் படுவது தங்களது அரசியல் லாபங்களுக்குத் தடையாக இருக்கலாம் என நினைத்தவர்களது முயற்சிகள் தான் மேலே சுட்டிக் காட்டப்பட்ட மோசமான வாசகங்களும், கோஷங்களும் வெளிப்பட காரணகர்த்தர்களாக இருப்பார்கள் என்பதில் மக்களுக்கு சிறிதும் சந்தேகமில்லை.

  கண்ணகி சிலை தாண்டி ஒரு பெண்ணின் வைக்கோல் பொம்மையை //கொடும்பாவி!!!// எடுத்துச் சென்று கொண்டிருந்தனர். யாருடையதாக இருக்கும்? என யோசிக்கையில் ஒரு கணம் பீட்டா ராதாராஜனின் முகம் நினைவில் வந்து போனது. பீட்டா தமிழகப் பிரதிநிதி ராதா ராஜன் ஜல்லிக்கட்டுக்காகப் போராடிக் கொண்டிருந்த மாணவர்கள் குறித்து வெளிப்படுத்திய கருத்தும் அவரது வயதுக்குப் பொருத்தமுடையதே அல்ல, எனினும் அவரை அவரது வாழ்நாள் முழுமைக்கும் வருந்தி அழச் செய்யும் வகையில் சமூக ஊடகங்களின் பின்னூட்டச் சூறாவளிகளில் பல ஆயிரம் முறைகள் சாடப்பட்டு விட்டார் அவர். இனி அவரைக் குறித்து சாடப் புதுத் தமிழ் வார்த்தைகள் கற்றுக் கொண்டால் தேவலாம் எனும் நிலை.

  இரு இளைஞர்கள் ஓட்டிச் சென்ற இரு வாகனம், அசல் காளை மாட்டைப் போலவே தோற்றமளிக்கும்படி வெள்ளை நிற வேஷ்டி சுற்றப்பட்டு முன்புறம் கொம்பு வைத்துக் கொண்டு, பின்னே நீண்டு வளைந்த வாலுமாக, உடன் சாலையில் சென்றவர்களை சற்றே மிரட்டிக் கடந்தது. ஸ்கை வாக் தாண்டிச் செல்கையில் 'எல்லாச் சாலைகளும் ரோம் நகரை நோக்கியே' என்ற புகழ் மிக்க வாசகத்திற்கு ஒப்பாக பாதையில் விரைந்து கடந்து கொண்டிருந்த வாகனங்கள் அனைத்துமே மெரினாவை நோக்கித் தான் சென்று கொண்டிருந்தன. பல இடங்களில் மக்கள் உணர்வுப் பூர்வமாக இன்றி உணர்ச்சி வயப் பட்ட நிலையில் இருந்ததையும் காண முடிந்தது. நேற்று மாலை 6 மணி வரை கூட காவல்துறையினர் மாணவர்களிடையே நட்பான அணுகுமுறையோடு தான் இருந்தார்கள். ஆனால் அப்போதே மெரினாவுக்குச் செல்லும் சில சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப் பட்டிருந்தது. இவை நேற்று மாலை சுமார் 8 மணி அளவில் மெரினாவில் அரங்கேறிய காட்சிகள்.

  இன்று காலை சட்டமன்றம் கூடவிருக்கும் நிலையில் மெரினாவில் மாணவப் போராட்டத்தைக் கலைக்கும் வகையில் காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட விருக்கின்றனர் என்ற செய்தி நேற்று காலை முதலே பல்வேறு சமூக ஊடகங்கள் வாயிலாக பகிரப்பட்டுக் கொண்டே தான் இருந்தது. ஆயினும் மாணவர்கள் தங்களது தொடர் போராட்டத்தைக் கலைப்பதற்காக, தங்களைச் சுற்றிலும் விரும்பத் தகாத சக்திகள் சிலவற்றால் பின்னப் பட்ட நூதனமான சதிவலையைப் பற்றி சற்று கவனத்துடன் இருந்திருக்கலாம். போராட்டத்தின் இறுதிநிலை என்பது கல் வீச்சு, கண்ணீர் புகை குண்டு, வாகனங்கள் தீக்கிறையான சம்பவம் என்றில்லாமல் 7 நாட்கள் இடைவிடாத மன உறுதியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் வெற்றி விழாவாக இருந்திருக்கலாம்.

  அதற்கான வாய்ப்பை சில துஷ்ட சக்திகள் திசை மாற்றி விட்டன. ஆயினும் மாணவர்களின் மன உறுதி தளரவில்லை என்பதை இப்போதும் மெரினாவில் ஓய்வு பெற்ற நீதிபதி பரந்தாமன் அவசரச் சட்டம் குறித்து அளிக்கும் விளக்கங்களை கேட்டபடி சந்தேக நிவர்த்தி அடைந்து கொண்டிருக்கும் மாணவர்களின் மனநிலையைக் கொண்டு நாம் அறிந்து கொள்ளலாம்.

  எப்படியாயினும் இந்த தன்னெழுச்சிப் போராட்டம் நம் இந்திய வரலாற்றிலும், தமிழக வரலாற்றிலும் பொன்னெழுத்துக்களில் பொரிக்கப் படத் தக்கதே. இப்படி உலகையே வியக்க வைத்த போராட்டம் வீணே கழியவில்லை. தனது பலனாக ஜல்லிக்கட்டு தடை நீக்க நிரந்தரச் சட்டத்தை அறுவடை செய்து கொண்டு தான் முடிந்துள்ளது. மாணவர்களோடு சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் சேர்த்தே இந்த வெற்றியாகவே இதைக் கொண்டாடலாம்.

  கருத்துகள் இல்லை

  Post Bottom Ad