ஜல்லிக்கட்டு கலவரம்: குற்ற பின்னணி இல்லாதவர்களைக் கைது செய்யக்கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு.
மதுரை: ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட குற்ற பின்னணி இல்லாதவர்களைக் போலீஸர் கைது செய்யக்கூடாது என்று உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் பங்கேற்ற மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த பி.உதயகுமார், முன்ஜாமீன் கோரி சென்னை உய ர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி என்.கிருபாகரன் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் வாதிடுகையில், போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட விடியோ ஆதாரங்களை வைத்து போலீஸர் தொடர் கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட பலரை கைது செய்த போலீஸர், மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தாமல் காவல் நிலையத்தில் வைத்து சட்டவிரோதமாக தாக்கி வருகின்றனர்.
அலங்காநல்லூர் போராட்டத்தில் வெளியூர்களைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர். அவர்களது செல்லிடப்பேசி, இருசக்கர வாகனம் உள்ளிட்ட உடைமைகளை பறிமுதல் செய்த போலீஸர் அவற்றை திருப்பி அளிக்க மறுத்து மிரட்டல் விடுத்து வருகின்றனர் என்றார்.
இதைப் பதிவு செய்த நீதிபதி, பண்பாட்டையும், கலாசாரத்தையும் மீட்டெடுக்க மக்கள் நடத்திய இந்தப் போராட்டத்தை உலகமே வியந்து போற்றியது. ஆனால், சில சமூக விரோத கும்பல் தலையீட்டால் போராட்டம் திசை மாறியது வருத்தமளிக்கிறது என்றார்.
மேலும், எந்த குற்றப் பின்னணியும் இல்லாதவர்களைப் போலீஸர் இனிமேல் கைது செய்யக்கூடாது. விடியோ பதிவுகளின் அடிப்படையில் போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டவர்களை மட்டும் கைது செய்யலாம். கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை உடனடியாக அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, மனுதாரரை செவ்வாய்க்கிழமை (ஜன. 31) வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை