ஏப்ரலுக்கு பிறகே உள்ளாட்சித் தேர்தல்.
ஏப்ரல் மாதத்துக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த இயலாது என பேரவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த சட்ட முன்வடிவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருந்தது. இத்தேர்தலில் உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. சென்னையில் 200 வார்டுகளில் ஒரு இடத்தில் கூட பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இது பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கும் எதிராக இருப்பாதால் இதற்காக தமிழக அரசு பிறப்பித்த அரசாணைகளை ரத்து செய்து விட்டு சுழற்சி முறையை பின்பற்றி இடஒதுக்கீடு பின்பற்ற வேண்டும் என திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 27 ஆம் தேதி நடந்த விசாரணையின் போது உள்ளாட்சி தேர்தல் குறித்து புதிய ஆணை பிறப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஏப்ரல் 30-க்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் கூறி இருந்தது.
இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் மசோதாவுக்கான சட்ட முன்வடி தாக்கல் இன்று சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் வாக்குப்பதிவு அலுவலர்கள் பள்ளி தேர்வுப் பணியில் ஈடுபடுவதால் ஏப்ரலுக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த சாத்தியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் ஏப்ரலுக்குப் பிறகே நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை