Header Ads

  • BREAKING



    ஸ்மிருதி இரானியின் கல்வித் தகுதி குறித்த ஆவணங்களை தில்லி பல்கலைக்கழகம் தாக்கல் செய்ய வேண்டும்: மத்திய தகவல் ஆணையம் உத்தரவு.

    மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கல்வித் தகுதி தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யும்படி தில்லி பல்கலைக்கழகத்தின் திறந்த நிலை கல்வி நிலையத்துக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
    முன்னதாக, தனது கல்வித் தகுதி தொடர்பான விவரங்களை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியிட வேண்டாம் என்று தில்லி பல்கலைக்கழகத்தை ஸ்மிருதி இரானி கேட்டுக் கொண்டிருந்தார்.
    இந்தச் சூழ்நிலையில், மத்திய தகவல் ஆணையம் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது.
    கடந்த ஏப்ரல் 2004-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஸ்மிருதி இரானி போட்டியிட்டபோது தாக்கல் செய்த வேட்பு மனுவில், தான் 1996-இல் தில்லி பல்கலைக்கழகத்தின் திறந்த நிலை கல்வி நிலையத்தின் மூலம் பிஏ பட்டம் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். 
     எனினும், ஜூலை 2011-இல் குஜராத்தில் மாநிலங்களவை உறுப்பினரை தேர்வு செய்வதற்காக நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டபோது தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது அதிகபட்ச கல்வித் தகுதி பி.காம். என தெரிவித்திருந்தார்.
    இதுதொடர்பாக சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து, இதுகுறித்து விசாரிக்கும்படி தனி நபரொருவர் தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
    எனினும், தேர்தல் நடந்து முடிந்து வெகுகாலம் கழித்து மனு தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறி அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
    இந்நிலையில், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஸ்மிதி இரானியின் கல்வித் தகுதி தொடர்பான விவரங்களைக் கோரி அந்த நபர் தில்லி பல்கலைக்கழகத்தில் மனு செய்திருந்தார்.
    எனினும், உரிய பதில் கிடைக்காததையடுத்து அந்த நபர் இப்பிரச்னை குறித்து மத்திய தகவல் ஆணையத்தில் புகார் செய்தார்.
    இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையின்போது, தில்லி பல்கலைக்கழகத்தின் திறந்த நிலை கல்வி நிலையத்தின் மத்திய பொது தகவல் அதிகாரி ஓ.பி.தன்வார் ஆஜரானார்.
    அப்போது, இது தனி நபர் குறித்த விவரம் என்பதால் தன்னுடைய கல்வித் தகுதி தொடர்பான விவரங்களை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியிட வேண்டாம் என்று பல்கலைக்கழகத்தை ஸ்மிருதி இரானி கேட்டுக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.
    எனினும், இதை நிராகரித்த மத்திய தகவல் ஆணையம் ஸ்மிருதி இரானியின் கல்வித் தகுதி தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யும்படி தில்லி பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad