மத்திய பட்ஜெட்டில் வரிவிதிப்பு முறையில் பெரிய மாற்றங்கள்!
பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள 2017-18 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் தாக்கலாகும் முதல் பட்ஜெட் என்பதால், எதிர்பார்ப்புகள் அதிகமாகவே உள்ளன. மறைமுக வரி வகைகளில், ஜூலை 1-ஆம் தேதியிலிருந்து அமலாகும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு குறித்த முழு விவரங்களும் பட்ஜெட்டில் இடம்பெறும். அதன்படி, சேவைகளுக்கு 12 முதல் 18 சதவிகித வரி விதிக்கப்படலாம் என்று தெரிகிறது. வருமான வரி விதிப்புக்கான வருமான வரம்பு ஆண்டுக்கு இரண்டரை லட்சம் ரூபாயிலிருந்து, 3 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது. இதனால் மாத ஊதியம் பெறும் லட்சக் கணக்கானோர் பயன்பெறுவார்கள். நிறுவன வரி 30 சதவிகிதத்திலிருந்து 27.5 சதவிகிதமாகக் குறைக்கப்படக் கூடும். மேட் எனப்படும் குறைந்தபட்ச மாற்று வரி 18.5 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாகக் குறைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. உரம், உணவுப் பொருள்களுக்கான மானியத்தைக் குறைப்பதன் மூலம் செலவைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை