Header Ads

  • BREAKING



    உலக சாதனை படைத்தது இஸ்ரோ: 104 செயற்கைக்கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக நிலை நிறுத்தம்.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) ஒரே ராக்கெட்டில் ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்களை புதன்கிழமை விண்வெளிப் பாதையில் நிலை நிறுத்தி புதிய உலகச் சாதனை படைத்தது.
    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து புதன்கிழமை காலை 9.28 மணிக்கு 104 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-37 விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
    சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து சீறிப்பாய்ந்த பிஎஸ்எல்வி சி37 ராக்கெட் பூமியில் இருந்து புறப்பட்ட 28 நிமிடம் 42 விநாடிகளில் சுமந்துச் சென்ற செயற்கைக்கோள்களை சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தியது. இதில், முக்கியமாக இந்தியாவின் கார்ட்டோசாட்-2 செயற்கைகோள் 714 கிலோ எடை கொண்டதாகும். இது பூமியிலிருந்து 505 கிலோமீட்டர் உயரத்தில் அதன் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இயற்கை வளங்களை பல்வேறு கோணங்களில் துல்லியமாக படம் எடுக்க உதவும் 3 கேமராக்கள் அதில் பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகளாகும். 
    நானோ செயற்கைக்கோள்கள்: ஐஎன்எஸ்-1ஏ, ஐஎன்எஸ்-1பி என இரண்டு நானோ வகை செயற்கைக்கோளும் இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்டன. இது தவிர, அமெரிக்காவின் 96 துணைச் செயற்கைக்கோள்கள், இஸ்ரேல், கஜகஸ்தான், நெதர்லாந்து, ஸ்விட்ஸர்லாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகள் என தலா ஒரு செயற்கைக்கோள்கள் என மொத்தம் 101 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் வர்த்தகரீதியாக விண்ணில் செலுத்தப்பட்டன. இந்த நானோ செயற்கைக்கோள்களின் மொத்த எடை 664 கிலோவாகும்.
    பி.எஸ்.எல்.வி. சி37 ராக்கெட் 320 டன் எடை கொண்டது. இந்த ராக்கெட் 44.4 மீட்டர் உயரம் கொண்டதாக இருந்தது.
    கண்காணிப்பு செயற்கைக்கோள்: கண்காணிப்பு மற்றும் தொலையுணர்வுக்காக கடந்த 2005 ஆம் ஆண்டு கார்ட்டோசாட் வகையான 5 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) முடிவு செய்தது. அதன்படி கடந்த 2005 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம்தேதி பி.எஸ்.எல்.வி. சி6 ராக்கெட்டில் முதல் கார்ட்டோசாட்-1 செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
    இதனைத்தொடர்ந்து பி.எஸ்.எல்.வி. சி7, பி.எஸ்.எல்.வி. சி9, பி.எஸ்.எல்.வி. சி15 மற்றும் பி.எஸ்.எல்.வி. சி34 உள்ளிட்ட ராக்கெட்டுகளில் கார்ட்டோ சாட் வகை செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.

    ரஷியாவின் சாதனை முறியடிப்பு 
    இஸ்ரோ கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டுவரை 226 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி உள்ளது. இதில் 179 வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் அடங்கும்.
    இஸ்ரோ கடந்தாண்டு ஒரே ராக்கெட் மூலம் 20 செயற்கைக்கோள்களை செலுத்தியது சாதனையாக இருந்து வந்தது. இப்போது பிஎஸ்எல்வி-சி37 ராக்கெட் மூலம் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி உலக சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் ரஷியா ஒரே ராக்கெட்மூலம் 37 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியதே உலக சாதனையாகும். இந்தச் சாதனையை இப்போது இஸ்ரோ முறியடித்துள்ளது.

    17 ஆவது நிமிஷத்தில் பிரிந்தது கார்ட்டோசாட் 2 
    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 104 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-37 ராக்கெட் புதன்கிழமை காலை 9.28 மணிக்கு புறப்பட்டது.
    புறப்பட்ட நேரத்தில் இருந்து 17 நிமிஷம் 29 வினாடிகளில் இந்தியாவின் கார்ட்டோசாட் 2 செயற்கைக்கோள் ராக்கெட்டில் இருந்து பிரிந்து விண்வெளிப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. அதன் பின்பு இந்தியாவின் நானோ செயற்கைக்கோள்களான ஐஎன்எஸ் 1 ஏ மற்றும் ஐஎன்எஸ் 1பி ஆகியவை முறையே 17 நிமிடம் 39 மற்றும் 40 வினாடிகளிலும் பிரிந்து சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டன. இந்த ராக்கெட் சுமந்து சென்ற வெளிநாடுகளைச் சேர்ந்த 101 நானோ செயற்கைக்கோள்களும் பூமியில் இருந்து புறப்பட்ட 18-ஆவது நிமிடத்தில் இருந்து 28-ஆவது நிமிடத்துக்குள் வெற்றிகரமாக சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டன.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad