உயர்நீதிமன்ற வளாக பாதுகாப்பை மேம்படுத்த 200 சிசிடிவி கேமிராக்கள்: தலைமை நீதிபதி தொடங்கி வைப்பு.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக அமைக்கப்பட்ட 200 கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தைத் தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில், கடந்த 2015-ஆம் ஆண்டு நவம்பர் 16-ஆம் தேதி முதல் மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தின் பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக புதிதாக 200 அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட 200 கண்காணிப்பு கேமராக்கள்(சிசிடிவி) பொருத்தப்பட்டுள்ளன.
இந்த கண்காணிப்பு கேமராக்களின் இயக்கம் மற்றும் இதற்கான கட்டுப்பாட்டு அறையை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் தொடங்கி வைத்தார்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உயர் நீதிமன்ற நீதிபதிகள், வழக்குரைஞர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படை தலைவர் ஓ.பி.சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உயர்நீதிமன்ற வளாகத்தில் மூன்று வகையான அதி நவீன கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த வசதி மூலம் 150 மீட்டர் வரையிலான நிகழ்வுகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்து துல்லியமாக கண்காணிக்க முடியும் என்றும், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலும் இந்த வசதி கொண்ட 52 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாகவும் மத்திய தொழில் பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை