Header Ads

  • BREAKING



    ஜிடிபியில் 23% நிழல் பொருளாதாரம்: மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்.

    மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 23 சதவீதம் அளவுக்கு நிழல் பொருளாதாரம் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது என மத்திய நிதி மற்றும் நிறுவன விவகாரங்களுக்கான இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தார்.

    மெட்ராஸ் மேலாண்மைச் சங்கத்தின் ஆண்டு மாநாடு, "இந்தியா 2017 -நவீன யுகத்தில் வெற்றிக்கான வழி' என்ற தலைப்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. மாநாட்டைத் தொடங்கி வைத்து மத்திய இணையமைச்சர் அர்ஜுன் ராம் பேசியதாவது:
    பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஊழல் மற்றும் நிழல் பொருளாதாரத்தை வேரோடு அழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு பேருதவியாக இருந்து வருகிறது.

    கள்ள நோட்டுகள் அதிகரிப்பு, கணக்கில் வராத பணப் பரிவர்த்தனை என நாட்டின் பொருளாதாரத்துக்கு இணையாக மற்றொரு நிழல் பொருளாதாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிழல் பொரளாதாரம் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 23 சதவீதம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, ரொக்கமில்லா பரிவர்த்தனை (டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை) போன்ற நடவடிக்கைகளின் மூலம் நிழல் பொருளாதாரத்தை ஒழித்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த முடியும். 
    வளர்ந்த நாடுகளில், பணப் பரிவர்த்தனைகள் அந்த நாடுகளின் ஜிடிபியில் 4 சதவீதத்தை தாண்டியதில்லை. ஆனால், இந்தியாவில் அது 12 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, வெளிப்படையான பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    நுகர்வு, முதலீடு, ஒட்டுமொத்த ஏற்றுமதி என்ற 3 காரணிகளைக் கொண்டு ஜிடிபி கணக்கிடப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, மத்திய பட்ஜெட்டில் ரூ.4 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad