Header Ads

  • BREAKING



    நாட்டின் முதல் ஹெலிகாப்டர் நிலையம்: தில்லியில் வரும் 28-ஆம் தேதி திறப்பு.

    நாட்டின் முதல் ஹெலிகாப்டர் நிலையம் (ஹெலிபோர்ட்), தேசியத் தலைநகர் தில்லியில் அடுத்த வாரம் திறக்கப்படவிருக்கிறது.

    "பவான் ஹன்ஸ்' பொதுத் துறை நிறுவனத்தால், மத்திய விமானப் போக்குவரத்துத் துறைக்காக ரூ.100 கோடி முதலீட்டில் இந்த ஹெலிகாப்டர் நிலையம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் தலைவரும், மேலாண் இயக்குநருமான பி.பி.சர்மா, பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:
    வடக்கு தில்லியின் ரோஹிணி பகுதியில் கட்டமைக்கப்பட்டுள்ள நாட்டின் முதல் ஹெலிகாப்டர் நிலையத்தை, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு வரும் 28-ஆம் தேதி திறந்துவைக்கவிருக்கிறார்.

    இங்கு அமைக்கப்பட்டுள்ள முனையம், ஒரே நேரத்தில் சுமார் 150 பயணிகளை கையாளும் வசதி கொண்டது.

    மேலும், 16 ஹெலிகாப்டர்களை நிறுத்தி வைக்கும் வகையிலான 4 மூடிய கட்டுமானங்களும், 9 ஹெலிகாப்டர்களை நிறுத்தி வைக்கக் கூடிய திறந்தவெளி நிறுத்துமிடங்களும் உள்ளன.

    இங்கு, கடந்த ஓராண்டாக சோதனை அடிப்படையில் ஹெலிகாப்டர்கள் தரையிறங்குவது, புறப்படுவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

    இந்த நிலையம் திறக்கப்படுவதன் மூலம் தில்லி விமான நிலையத்தில் ஹெலிகாப்டர்கள் புறப்பாடு, தரையிறங்குவதில் நெருக்கடி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தில்லி விமான நிலைத்தில் தற்போது தினமும் சராசரியாக 40 முதல் 50 ஹெலிகாப்டர்கள் புறப்பாடு, தரையிறங்கும் சேவைகள் நடைபெறுகின்றன.

    பயணிகள் போக்குவரத்துக்கு மட்டுமின்றி, பேரிடர் மேலாண்மை, அவசரகால மருத்துவ சேவை, சட்டம்-ஒழுங்கு கண்காணிப்புப் பணி உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கும் இந்த நிலையம் பயன்படுத்தப்படும்.

    வடக்கு பிராந்தியத்தில் வான்வழி தொடர்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இது அமையும் என்று பி.பி.சர்மா தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad