Header Ads

  • BREAKING



    இன்று விண்ணில் ஏவப்படுகிறது பிஎஸ்எல்வி சி-37 ராக்கெட்.

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-37 ராக்கெட் புதன்கிழமை காலை 9.28 மணிக்கு 104 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 28 மணி நேரம் கவுன்ட் டவுன் செவ்வாய்க்கிழமை காலை 5.28 மணிக்கு தொடங்கியது.
    104 செயற்கைக்கோள்களுடன்..: 320 டன் எடை கொண்ட ராக்கெட் 44.4 மீட்டர் உயரம் கொண்டது. 714 கிலோ எடை கொண்ட கார்ட்டோ சாட் 2 செயற்கைக்கோளை சுமந்து செல்கிறது. இந்த கார்ட்டோ சாட்2 செயற்கைக்கோள் பூமியில் இருந்து 505 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது. அதில், இயற்கை வளங்களை பல்வேறு கோணங்களில் துல்லியமாக படம் எடுக்க உதவும் வகையில் 3 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள். இதுதவிர இந்தியாவின் 2 நானோ வகை செயற்கைக்கோள்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த 101 நானோ வகை செயற்கைக்கோள்கள் ஆகியனவும் அனுப்பப்படுகின்றன. இவற்றின் மொத்த எடை 664 கிலோ. இந்த செயற்கைக்கோள்கள் துருவப்பகுதியின் குறிப்பிட்ட சுற்று வட்டப்பாதையில், பி.எஸ்.எல்.வி. சி37 ராக்கெட் மூலம் நிலை நிறுத்தப்படும். 
    கண்காணிப்பு செயற்கைக்கோள்: பூமி கண்காணிப்பு, தொலையுணர்வுக்காக 2005-ஆம் ஆண்டு கார்ட்டோ சாட் வகையான 5 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) முடிவு செய்தது.
    இதன்படி, 2005-ஆம் ஆண்டு மே 5-இல் பி.எஸ்.எல்.வி. சி6 ராக்கெட்டில் முதல் கார்ட்டோ சாட் 1 செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
    இதனைத் தொடர்ந்து, பி.எஸ்.எல்.வி. சி 7, பி.எஸ்.எல்.வி. சி 9, பி.எஸ்.எல்.வி. சி 15, பி.எஸ்.எல்.வி. சி34 உள்ளிட்ட ராக்கெட்டுகளில் கார்ட்டோ சாட் வகை செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad