பஞ்சாப் நேஷனல் வங்கி லாபம் 4 மடங்கு அதிகரிப்பு.
பொதுத் துறையைச் சேர்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் மூன்றாம் காலாண்டு லாபம் 4 மடங்கு அதிகரித்தது.
இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதி ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.14,497.65 கோடி வருவாய் ஈட்டியது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.13,891.20 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 4.36 சதவீதம் அதிகமாகும்.
வரி தவிர்த்து, இதரவகை செலவுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.3,775.53 கோடியிலிருந்து 22.23 சதவீதம் குறைந்து ரூ.2,935.86 கோடியாக காணப்பட்டது.
இதையடுத்து, நிகர லாபம் ரூ.51.1 கோயிலிருந்து 306 சதவீதம் (4 மடங்கு) அதிகரித்து ரூ.207.18 கோடியாக காணப்பட்டது.
வழங்கப்பட்ட மொத்த கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 8.47 சதவீதத்திலிருந்து அதிகரித்து 13.70 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் விகிதம் 5.86 சதவீதத்திலிருந்து உயர்ந்து 9.09 சதவீதமாகவும் காணப்பட்டது என்று பஞ்சாப் நேஷனல் வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை