Header Ads

  • BREAKING



    அமெரிக்காவில் ரூ.46,000 கோடியில் இன்டெல் சிப் ஆலை: டிரம்ப் முன்னிலையில் அறிவிப்பு.

    கணினி வன்பொருள் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த இன்டெல் நிறுவனம் அமெரிக்காவின் அரிஸோனா மாகாணத்தில் புதிய சிப் தயாரிப்பு ஆலையை தொடங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
    தலைநகர் வாஷிங்டனில் அதிபர் டிரம்ப் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இன்டெல் நிறுவன தலைமை நிர்வாகி பிரையன் கிர்ஸானிச் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அவர் கூறியதாவது: கடந்த 2011-ஆம் ஆண்டு அமெரிக்காவின் தென்கிழக்கு மாகாணங்களில் 500 கோடி டாலர் (சுமார் ரூ.33,000 கோடி) முதலீட்டில் இன்டெல் சிப் தயாரிப்பு ஆலை தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால், அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. அதிபரின் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அழைப்பை ஏற்று தற்போது, அந்த திட்டத்துக்குப் புத்துயிர் கொடுக்கப்பட்டுள்ளது. 
     தற்போது அமைக்கப்பட உள்ள சிப் தயாரிக்கும் ஆலை உருவாக்கத்துக்கு 700 கோடி டாலர் (சுமார் ரூ.46,000 கோடி) முதலீடு செய்யப்பட உள்ளது. இந்த புதிய ஆலையில் நவீனமான 7-நானோமீட்டர் ரக செமிகண்டக்டர் சிப் தயாரிக்கப்படும்.
    இப்புதிய ஆலையின் மூலம் நேரடியாக 3,000 தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு அதிக சம்பளத்தில் வேலைவாய்ப்பு கிடைக்கும். மறைமுகமாக 10,000 பேர் வேலைவாய்ப்பு பெறுவர். இன்டெல் நிறுவனத்தின் பெரும்பாலான ஆலைகள் அமெரிக்காவில் அமைக்கப்பட்டுள்ளது குறித்து மிகவும் பெருமையாக உள்ளது. நிறுவனத்தின் பெரும்பாலான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகள் இங்கிருந்துதான் மேற்கொள்ளப்படுகின்றன. அதேசமயம், நிறுவனத்தின் 80 சதவீத விற்பனை வெளிநாடுகளில்தான் நடைபெறுகிறது என்றார் அவர்.
    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதுகுறித்து தெரிவித்ததாவது: இன்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சில வாரங்களுக்கு முன்பு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அமெரிக்காவின் அரிúஸானா மாகாணத்தில் மிகப்பெரிய திட்டத்தை அறிவிக்க உள்ளதாக தெரிவித்தார். தற்போது அது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அதிக வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றார் அவர். உள்நாட்டில் அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என அமெரிக்க நிறுவனங்களுக்கு டிரம்ப் அதிக அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், இன்டெல் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு அவரின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்படுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad