Header Ads

  • BREAKING



    ஆதார் சேவைக்கு பணம் வசூலித்த50 இணையதளங்கள் முடக்கம்.

    புதுடில்லி : ஆதார் தொடர்பான சேவைகளை அளிப்பதாக, மக்களிடம் பணம் வசூலித்துள்ள, 12 இணையதளங்கள், 12, 'மொபைல் ஆப்'கள் முடக்கப்பட்டு உள்ளன. மேலும், 26 இணையதளங்கள் மற்றும் ஆப்களை முடக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.ஆதார் சேவைகளை அளிக்கும், யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி, அஜய் பூஷண் பாண்டே கூறியதாவது:நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு, அவர்களுடைய கைவிரல் ரேகை, முகம், கண் உள்ளிட்ட விபரங்களின் அடிப்படையில், ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. தற்போது இது, பல்வேறு அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் சேவைகளை பெறுவதற்கும், முகவரி மற்றும் அடையாள அட்டையாகவும் பயன்படுகிறது.இதை, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கி வருகிறது. பல்வேறு சேவைகளுக்கு, 'டெமாகிராபிக்' எனப்படும், இருப்பிட அடையாள விபரங்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. ஆதார் சேவைகள் தருவதாக, பல போலி இணையதளங்கள், மொபைல் ஆப்கள் செயல்பட்டு வருகின்றன. ஆதார் அட்டை பதிவிறக்கம், பிளாஸ்டிக் ஆதார் அட்டை உட்பட, பல்வேறு ஆதார் தொடர்பான சேவைகளை தருவதாக இவை கூறி வருகின்றன. இதற்காக, பொதுமக்களிடம் இருந்து பணத்தை வசூலிப்பதாகவும் புகார்கள் வந்தன.அதனடிப்படையில், இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 12 இணையதளங்கள், 12 மொபைல் ஆப்கள் முடக்கப்பட்டு உள்ளன.

    மேலும், 26 இணையதளங்கள், மொபைல் ஆப்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.மத்திய அரசு அமைப்பான ஆணையத்தின் பெயர் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி, இவை மோசடியில் ஈடுபட்டுள்ளதால், காப்புரிமை சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.ஆதார் தொடர்பான எந்த சேவைக்கும், எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. அதே போல், எந்த அமைப்பையும், ஆதார் சேவைகளை அளிப்பதற்காக நியமிக்கவில்லை. இது போன்ற போலி இணையதளங்கள், ஆப்களை நம்பி, மக்கள் தங்களுடைய ஆதார் விபரங்களை தர வேண்டாம்.எந்த தகவலுக்கும், ஆணையத்தின் www.uidai.gov.in என்ற இணையதளத்தை மட்டும் பயன்படுத்த வேண்டும் அல்லது ஆணையத்தின் பொது சேவை மையங்கள், ஆதார் நிரந்தர பதிவு மையங்களை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad